உலகம்

4 கார்களில் நிரப்பப்பட்ட பணத்துடன் நாட்டிலிருந்து வெளியேறிய ஆப்கன் அதிபர்: ரஷ்யா

செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, நான்கு கார்களில் நிரப்பப்பட்ட பணத்துடன் ஹெலிகாப்டரில் நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள் வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிபர் அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளன

இந்த நிலையில் அஷ்ரப் கானி எவ்வாறு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறினார் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்ய தூதரக செய்தித் தொடர்பாளர் நிகிதா கூறும்போது, “ஆப்கானிஸ்தானிலிருந்து நான்கு காரில் நிரப்பட்ட பணத்துடன் ஹெலிகாப்டரில் ஏறி ஆப்கானிலிருந்து அதன் அதிபர் அஷ்ரப் கானி வெளியேறிவிட்டார்.அவர்கள் பணத்தை காரில் ஏற்றும்போது இடமில்லாத காரணங்கள் பல ரூபாய் நோட்டுகள் தரையில் விழுந்தன” என்று தெரிவித்தார்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் ஆப்கானிஸ்தான் கொண்டு வரப்பட்டுள்ளதால் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

SCROLL FOR NEXT