ஆப்கானிஸ்தானுக்குக் கூடுதல் படைகளை அனுப்பிவைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு குழுவுடனான ஆலோசனைக்குப் பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதிலிருந்தே அங்கு தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 13 மாகாணங்களைக் கைப்பற்றிவிட்டனர்.
தலைநகர் காபூலை தலிபான்கள் நெருங்க இன்னும் 30 நாட்கள் ஆகும் என்று அமெரிக்காவே கணித்திருந்த நிலையில் இன்று காபூலிலும் தலிபான்கள் நுழைந்துவிட்டனர். அதுவும் சரியாக அமெரிக்க தூதரகத்தின் மேலுள்ள ஹெலிபேடில் அவர்கள் தரையிறங்கியுள்ளனர்.
இந்நிலையில், ஆப்கனுக்கு கூடுதல் படைகளை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஏற்கெனவே அங்கே 3000 அமெரிக்க வீரர்கள் இருந்த நிலையில் தற்போது மேலும் 2000 பேரை அமெரிக்கா அனுப்பியுள்ளது.
அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ஆப்கன் பொதுமக்களைப் பாதுகாக்கும் வகையில் இந்தக் கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறத் திட்டமிட்டுள்ளது. அதற்குள் குறைந்தது 30,000 பேரையாவது வெளியேற்ற வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது.
இந்நிலையில் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து பிடென் கூறுகையில், "நான் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றபோது எனக்காக ஒரு வேலை ஏற்கெனவே காத்திருந்தது. எனக்கு முந்தையவர்கள் ஒரு பணியை விட்டுச் சென்றிருந்தனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து மே 1 2021க்குள் அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதுதான் அந்தக் கெடு. என் முன்னால் இரண்டு வாய்ப்புகள் இருந்தன. ஒன்று முந்தையவர்கள் விட்டுச் சென்ற பணியை முடிப்பது. இன்னொன்று அமெரிக்கப் படைகளை கூடுதலாக அனுப்பி ஆப்கன் அரசின் உள்நாட்டுப் போரில் மீண்டும் பங்கேற்பது.
நான் இரண்டாவது வாய்ப்பை எடுத்துக் கொள்வதாக இல்லை. எனக்கு முன்னாள் 2 குடியரசுக் கட்சி அதிபர்கள், இரண்டு ஜனநாயகக் கட்சி அதிபர்கள் செய்ததை நான் செய்வதாக இல்லை" என்று கூறினார்.