ஆப்கானிஸ்தானின் பல மாகாணங்களை கைப்பற்றி வந்த தலிபான் தீவிரவாதிகள் இன்று தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்தனர். தலிபான் வருவதையடுத்து, தலைநகரில் உள்ள அரசுஅலுவலகங்களில் உள்ள ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்க தூதரகத்தின் மீது தலிபான்கள் ஹெலிகாப்டரை இறக்கியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ படைகளும், அமெரிக்கப் படைகளும் வெளியேறத் தொடங்கியபின் தலிபான்கள் வேகமாக பல்வேறு மாகாணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். தலிபான்களுக்கும், ஆப்கன் ராணுவத்துக்கும் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவி மக்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டு வருகின்றனர்.
தலிபான்கள் அட்டூழியத்தைப் பொறுக்க முடியாமல், பேச்சுவார்த்தைக்கு ஆப்கான் அரசு முன்வந்துள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் கத்தார் நாட்டை மத்தியஸ்தராக முன்வைத்து தலிபான்களுடன் பேச்சு நடத்த ஆப்கன் அரசு அழைப்பு விடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றி வருகிறார்கள். இதுவரை தலிபான்கள் வசம் 13 மாகாணங்கள் சென்றுவிட்டன. கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள், குழந்தைகள் கொல்லப்பட்டனர்.
இ்ந்நிலையில் தலைநகர் காபூல் நகருக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் மாகாணத்தில் உள்ள கலாகான், குவாராபாக், பாக்மான் ஆகிய நகரங்களுக்குள் தலிபான்கள் நுழைந்துவிட்டனர் எனத் தெரிவித்தனர்.
ஆனால், தலிபான்கள் தரப்பில் கூறுகையில் “ காபூல் நகரில் எந்தப் பகுதியையும் அடக்குமுறையின்மூலம், கட்டாயத்தின் மூலம் எடுக்கமாட்டோம். மக்களின் உயிருக்கும், சொத்துக்களுக்கும், மரியாதைக்கும் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது. காபூல் நகரில் வசிக்கும் மக்கள் உயிரைப் பற்றி கவலைப்பட வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே காபூல் நகர் அருகே இருக்கும் ஜலாலாபாத்தை கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள், அமெரிக்கத் தூதரகத்தின் மீது சிஎச்-47 சினூக் ஹெலிகாப்டரை இறக்கியுள்ளனர்.
அமெரிக்க தூதரகத்தின் மீது தலிபான்கள் ஹெலிகாப்டரை இறக்கியது தொடர்பாக, அமெரிக்க அரசு தரப்பிலிருந்து எந்தவிதமான பதிலும்இல்லை.ஆனால், அமெரிக்க தூதரகத்தின் அருகே இருந்து ஏராளமான புகை வெளியாகி வருகிறது, இதனால், ஏராளமான முக்கிய ஆவணங்கள் தலிபான்கள் கைகளுக்கு கிடைக்காமல் இருக்க அமெரிக்கஅதிகாரிகள் எரித்துவரலாம் என்று கூறப்படுகிறது.
மேலும், யுஹெச்-60 பிளாக் ஹாக் ஹெலிகாப்டரும் அமெரிக்க தூதரகம் அருகே தரையிறங்கியுள்ளது. அமெரி்க்க படைகளைத் தொடர்ந்து செக் குடியரசும் தனது படைகளை வாபஸ் பெறவும் முடிவு செய்துள்ளது.
தலிபான்கள் ஆப்கனில் பலபகுதிகளை ஆக்கிரமித்து வரும் சம்பவங்களுக்குப்பின் முதல்முறையாக நேற்று அதிபர் அஷ்ரப் கானி மக்களிடம் பேசினார். ராணுவ முயற்சி இல்லாமல் பேச்சு வார்த்தை மூலம் தலிபான்களிடம் சமாதானம் பேசவும் அதிபர் கானி தெரிவி்த்துள்ளார். ஆனால், இதுவரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோதிலும், இன்னும் உறுதியாகவில்லை, இதனால் தலிபான்கள் கைப்பற்றும் பகுதி அதிகரித்து வருகிறது.
இதனால் மக்கள் உயிருக்கு அஞ்சி சாலைகளிலும், பூங்காக்களிலும், திறந்த வெளியிலும் தங்கியுள்ளனர். ஏடிஎம் அனைத்தும் மூடப்பட்டதால், மக்கள் செலவுக்கு பணம் இல்லாமல் வங்கி வாசலில் காத்திருக்கிறார்கள், தங்கள் வாழ்நாள் சேமிப்பை எடுத்துக்கொண்டு எங்காவது செல்லவும் மக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.