ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரமான ஜலாலாபாத்தை தலிபான்கள் கைபற்றியுள்ளனர்.
இதுகுறித்து ஆப்கான் ஊடகங்கள் தரப்பில் கூறப்படுவதாவது:
“ கிழக்கு பகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரமான ஜலாலாபாத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தலிபான் தீவிரவாதிகள் கைபற்றினர். கடந்த பத்து நாட்களாக ஆப்கானின் நகரங்களை கைபற்றும் தலிபான்களின் முயற்சி வெற்றியடைந்துள்ளது” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஜலாலாபாத் ஆளு நர் அக்மத் வாலி கூறும்போது, “ நாங்கள் காலையில் எழுந்துபார்க்கும்போது நகரில் பல பகுதிகளில் தலிபான்கள் தங்கள் வெள்ளைக் கொடியை ஏற்றி வைத்துள்ளனர். சண்டையிடாமல் அவர்கள் இப்பகுதியை கைபற்றியுள்ளதாக அறிவித்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலின் பெரும்பாலான எல்லைப் பகுதிகளை தலிபான்கள் கைபற்றியுள்ளனர்.
சனிக்கிழமை பொதுமக்களிடம் பேசிய ஆப்கான் அதிபர் அஷ்ரப் கானி, பொது மக்கள் மீது போர் விழ அனுமதிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்னர், வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.