ஆப்கானிஸ்தான் மக்கள் மீது போர் தொடுக்க அனுமதிக்க மாட்டேன் என்று அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி தனது பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார் என்ற தகவல் வெளியான நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார்.
தலிபான்கள் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை விரைவில் கைபற்றுவார்கள் என்ற கணிப்புகள் வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இதுகுறித்து ஆப்கான் அதிபர் அஷ்ரப்கானி கூறும்போது, “ஆப்கன் மக்கள் மீது வன்முறை மற்றும் போர் விழுவதை அனுமதிக்க மாட்டேன். ஸ்திரத்தன்மை நிலை நிறுத்தப்படும். இதனை அதிபராக உறுதியளிக்கிறேன். அதற்கான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
கடந்த 20 வருடங்களில் ஏற்பட்ட உயிரிழப்பு நான் மீண்டும் அனுமதிக்க மாட்டேன்” என்றார்.
முன்னதாக சில தினங்களுக்கு முன்னர், வெறும் 30 நாட்களில் காபூலை தலிபான் தீவிரவாதிகள் தனிமைப்படுத்தி 90 நாட்களில் ஒட்டுமொத்த காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தலைநகர் காபூலைக் கைப்பற்றும் முயற்சிலும் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் தலிபான்களுக்கும் அரசுப் படைகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தலிபான்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இதுவரை 7 மாகாணங்களைக் கைப்பற்றியுள்ளனர். சுமார் 60,000க்கும் அதிகமான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன.