உலகம்

ஆப்கன் விவகாரத்தில் உலகம் பாராமுகம் காட்டக்கூடாது:  அரசியல் தலைவர் அப்துல்லா அப்துல்லா கருத்து

ஏஎன்ஐ

தலிபான்களால் ஆப்கானிஸ்தானின் அமைதிக்கு பெரும் குந்தகம் ஏற்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த உலகமும் இவ்வாறாக பாராமுகம் காட்டக்கூடாது என அந்நாட்டு மூத்த அரசியல் தலைவர் அப்துல்லா அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அங்கு மேலோங்கி வருகிறது. அரசுப் படைகளுக்கும் தலிபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது.

முக்கிய நகரங்கள் தலிபான்கள் வசமாகி உள்ளன. உள்நாட்டுப் போரில் ஏராளமான அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

குறுகிய காலத்தில் 9 மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். குண்டூஸ், தலூக்கான், ஷேபேர்கான், ஜரான்ஜ், சமங்கன், ஃபாரா உள்ளிட்ட 9 மாகாணங்களை தலிபான்கள் வசம் சென்றுவிட்டது.

இத்தகைய சூழலில், கத்தாரில் இன்று தொடங்கி மூன்று நாட்களுக்கு ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டுவது தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன், உஸ்பெகிஸ்தான், கத்தார் நாட்டுப் பிரதிநிதிகளும், ஐ.நா சபை மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய அப்துல்லா அப்துல்லா, "தலிபான்கள் சிறையில் உள்ள 5000 பேரை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோருகின்றனர். ஏற்கெனவே ஒருமுறை இதுபோல் அவர்களின் கோரிக்கையை ஏற்று விடுதலை செய்தபோது அமைதி ஏற்படவில்லை. போரும் முடிவுக்கு வரவில்லை. அதை மீண்டும் செய்வது உத்தமம் அல்ல.

தலிபான்களின் அட்டகாசத்தை ஒடுக்கவில்லை என்றால் அது ஆப்கானிஸ்தானுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் தலைவலியை ஏற்படுத்தும். ஏனெனில் அவர்களுடன் தற்போது வேறு சில பயங்கரவாத குழுக்களும் கைகோர்த்துள்ளன.

ஆப்கானிஸ்தானில் மனிதகுலத்துக்கு இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் கண்டு உலக நாடுகள் பாராமுகம் காட்டக் கூடாது. உலக நாடுகள் இணைந்து தலிபான்களுக்கு கடுமையான செய்தியைக் கடத்த வேண்டும்" என்று பேசியுள்ளார்.

SCROLL FOR NEXT