சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில், விமான எதிர்ப்பு ஏவுகணைகளை சீன ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏராளமான இயற்கை வளம் கொண்ட தென் சீன கடல் பகுதியில் உள்ள தீவுகளுக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது. தைவான், வியட்நாம் ஆகிய நாடுகளும் இவற்றுக்கு சொந்தம் கொண்டாடுவதால் சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்குகிறது.
இந்நிலையில் தென் சீன கடல் பகுதியில் பிற நாட்டு விமானங்கள் பறந்தால் அதை சுட்டு வீழ்த்தக் கூடிய ஏவுகணைகளை சீனா தயார் நிலையில் வைத்திருப்பது செயற் கைக்கோள் புகைப்படங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
அப்பகுதியில் உள்ள பராசல் தீவுத் தொடரின் ஒரு பகுதியான உட்டி தீவு பகுதியில், தரையி லிருந்து விண்ணில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட எச்.க்யூ.9 ஏவுகணை லாஞ்சர்களின் 2 பேட்டரிகள், ராடார் சிஸ்டம் ஆகியவை இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கடந்த 3-ம் தேதி காலியாக இருந்த அந்தத் தீவின் கடற்கரைப் பகுதி யில், 14-ம் தேதி ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டி ருப்பதை செயற்கைக்கோள் புகைப்படங்கள் உணர்த்து கின்றன.
இதுகுறித்து அமெரிக்க உயர் அதிகாரி கூறும்போது, “எச்.க்யூ. 9 ரக ஏவுகணைகள் 200 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்டது. எனவே, அப்பகுதியில் பிற நாட்டு பயணிகள் விமானமோ, ராணுவ விமானமோ பறந்தால் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்றார்.
உறுதியான தீர்வு: ஒபாமா
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சன்னி லேண்ட்ஸில் முதல் அமெரிக்க ஆசியான் மாநாடு நடந்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ஒபாமா செய்தியாளர்களிடம் கூறும் போது, “தென் சீன கடலில் நிலவும் பதற்றத்தைத் தணிக்க, சட்ட ரீதியாக உறுதியான நடவடிக்கை எடுப்பது குறித்து இந்த மாநாட்டில் விவாதித்தோம். சர்ச்சைக்குரிய அந்தப் பகுதியில் புதிய கட்டுமானங்கள் எழுப்பவோ, ராணுவ பலத்தை நிறுவவோ கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளோம். விரைவில் நடக்கவுள்ள கடல் சட்டங்கள் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் இது குறித்து முடிவு எடுக்கப்படும். அந்த முடிவை மதிக்க நேச நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன” என்றார்.