சீனாவில் கரோனா டெல்டா வைரஸால் சமீப நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவின் யோங்ஸோ நகரில் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை மையம் ஒன்று தொற்றின் கூடாரமாக மாற ஒரே நாளில் 143 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் டெல்டா வேரியன்ட்டே பாதிப்பை ஏற்படுத்தியதும் உறுதியாகியுள்ளது.
இதனால், மாஸ் டெஸ்டிங் சென்டர் எனப்படும் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கரோனா பரிசோதனை மையங்களை சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து கவனமாகக் கையாள வேண்டும் என்று அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.
யாங்ஸோ நகரின் மொத்த மக்கள் தொகை 46 லட்சம். இதுவரை அங்கு 16 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று மேலும் பரவாமல் கட்டுப்படுத்தப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஏற்கெனவே நான்ஜிங் நகரிலும் இதே போன்று திடீரென தொற்று பரவல் ஏற்பட்டது. அங்குள்ள விமான நிலையத்தில் சுத்தம் செய்யும் பணியிலிருந்தவர்களுக்கு ஏற்பட்ட தொற்று நகரின் பல பகுதிகளிலும் தொற்று ஏற்படக் காரணமானது. அங்கு தற்போது தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
சீனாவில் தொற்று கண்டறிதல், தனிமைப்படுத்தல், தொடர்பை உறுதிப்படுத்துதல் என தொடர்ந்து கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டு பாதிப்புகளை பூஜ்ஜியம் என்றளவில் சீனா வைத்திருந்தது. வெளிநாடுகளில் இருந்து வருவோரிடம் மட்டுமே தொற்று கண்டறியப்பட்டு வந்தது. அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்துவந்தது.
ஆனால், 7 மாதங்களுக்குப் பின் டெல்டா வைரஸால் அங்குமிங்குமாக கரோனா பரவல் ஏற்படுத்துவது சீனாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனை சமாளிக்க மைக்ரோ திட்டங்களாக, தொற்று உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை சீன அரசு மேற்கொண்டு வருகிறது.