கிழக்கு லடாக்கின் கோக்ரா பகுதியிலிருந்து இந்திய, சீனப் படைகள் வாபஸ் வாங்கியுள்ளன. கடந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் கிழக்கு லடாக் எல்லையின் பல்வேறு முனைகளில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர்.
அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். கடந்த ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன வீரர்களிடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்களும் சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.
இதையடுத்து, கடந்த செப்டம்பரில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற மாநாட்டில் இந்திய, சீன வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்துப் பேசினர். அப்போது லடாக் எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண உடன்பாடுஎட்டப்பட்டது. இதன்பின் இரு நாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்ந்தனர்.
அண்மையில் 12 வது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகளை திரும்பப் பெறுவதில்எந்த முடிவும் எட்டப்படாமல் இருந்தது.
12வது சுற்று பேச்சு நேற்று முன்தினம் சீனாவின் எல்லைக்குட்பட்ட மோல்டோ பகுதியில் நடந்தது. ஒன்பது மணி நேரத்துக்கு மேல் நடந்த இந்தப் பேச்சு திருப்திகரமாக இருந்ததாக இருதரப்பும் தெரிவித்தன. 'கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்த படைகளை திரும்பப் பெற இருதரப்பும் ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியானது.
அதன்படி, அப்பகுதியிலிருந்து இந்திய, சீன்ப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. வீரர்கள் தத்தம் நிரந்தர முகாம்களுக்குத் திரும்பினர்.
இந்திய சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் சர்ச்சைக்குரிய இடங்களில் இரு தரப்பிலும் தலா 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் படை வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், கோக்ராவிலிருந்து இந்திய, சீனப் படைகள் பின்வாங்கியுள்ளது எல்லைப் பிரச்சினையில் நல்லதொரு முன்னேற்றமாகப் பார்க்கப்படுகிறது.