உலகம்

ஹிஜாப் அணியாததற்காக இளம்பெண்ணைக் கொன்ற தலிபான்கள்

செய்திப்பிரிவு

ஹிஜாப் அணியாததற்காக இளம்பெண் ஒருவரை தலிபான்கள் கொன்றதாக ஆப்கன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி வருவதால், ஆப்கன் மீதும் பொதுமக்கள் மீதும் தலிபான்கள் தங்களது தாக்குதலை அதிகரித்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தியப் பத்திரிகையாளர் டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். கடந்த வாரம் ஆப்கனின் பிரபல நகைச்சுவை நடிகர் நசார் முகமத் கொல்லப்பட்டார். இந்தக் கொலை சம்பவங்கள் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இளம்பெண் ஒருவரை தலிபான்கள் கொலை செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து ஆப்கன் ஊடகங்கள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் பால்க் மாவட்டத்திற்கு காரில் சென்று கொண்டிருந்த நசானின் என்ற 21 வயது பெண் ஹிஜாப் அணியாததற்காக தலிபான்கள் கடத்திச் சென்று கொன்றுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தலிபான்கள் மறுத்துள்ளனர். தலிபான்களின் விதிமுறைகள்படி, பெண்கள் கல்வி கற்பது, ஹிஜாப் அணியாமல் இருப்பது குற்றமாகும்.

SCROLL FOR NEXT