உலகம்

டெல்டா பரவல் தொடர்ந்தால் அமெரிக்கா நிலைமை மோசமாகும்: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

செய்திப்பிரிவு

டெல்டா வைரஸ் தொடர்ந்து பரவினால் அமெரிக்காவில் நிலைமை மோசமாகும் என்று ஆண்டனி ஃபாஸி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி கூறும்போது, “டெல்டா வைரஸ் தொடர்ந்து இம்மாதிரியாகப் பரவி வந்தால், அமெரிக்காவில் நிலைமை மோசமாகலாம். ஆனால், ஊரடங்கை நோக்கிச் செல்வதற்கு வாய்ப்பில்லை என்று நான் நினைக்கிறேன்.

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இன்னமும் நிறைய நபர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவில் 10 கோடிக்கும் அதிகமானவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர்” என்றார்.

அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 21 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் ஊக்கத்தொகை அளிக்கப்படும் என்று அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.

டெல்டா வைரஸ் காரணமாகப் பல நாடுகளில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. பிரிட்டன், ஜெர்மனி, ஸ்வீடன், பிரான்ஸ், தென்கொரியா ஆகிய நாடுகளிலும் அதுவே எதிரொலிக்கிறது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன. உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 19 கோடியைக் கடந்துள்ளது.

அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 42 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT