காசா: கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதியில் இருந்து ஹமாஸ் - இஸ்ரேல் இடையே தாக்குதல் நடைபெற்று வருகிறது. காசாவில் இருந்து தாக்குதல் நடத்தும் ஹமாஸ் அமைப்பினர், சுரங்கங்களில் பதுங்கி கொள்கின்றனர்.
காசாவின் பெரும்பாலான வீடுகளின் நிலத்தடியில் சுரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை எல்லாம் கண்டுபிடித்து இஸ்ரேல் படையினர் அழித்து வருகின்றனர்.
இந்நிலையில், தெற்கு காசா முனையில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய சுரங்கத்தை இஸ்ரேல் படையினர் நேற்றுமுன்தினம் கண்டுபிடித்துள்ளனர்.
நிலத்தில் 25 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கம் 7 கி.மீ. தூரத்துக்கு அமைந்துள்ளது. இந்த சுரங்கத்துக்குள் சுமார் 80 அறைகளும் உள்ளன. இந்த சுரங்கம் தொடர்பான வீடியோவை இஸ்ரேல் படையினர் வெளியிட்டுள்ளனர்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணைக் கைதிகளில் இஸ்ரேல் வீரர் ஹதர் கோல்டின் என்பவரும் ஒருவர்.
அவரை கொலை செய்து இந்த சுரங்கத்துக்குள்தான் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. கடந்த வாரம் கோல்டின் உடலை இஸ்ரேலிடம் ஹமாஸ் ஒப்படைத்தது குறிப்பிடத்தக்கது.