பெகாசஸ் உளவு மென்பொருளை முறைகேடாக பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில், அதைப் பயன்படுத்த சில நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு இஸ்ரேலின் என்எஸ்ஓ நிறுவனம் தடை விதித்துள்ளது.
பெகாசஸ் உளவு மென்பொருள்மூலம் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோரின் செல்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குற்றம் சாட்டின.
இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ நிறுவனத்தின் தயாரிப்புதான் பெகாசஸ் உளவு மென்பொருள். இந்நிறுவனம் இந்த மென்பொருளை பல்வேறு நாடுகளின் அரசு அமைப்புகளுக்கு (உளவு, ராணுவம்) விற்பனை செய்து வருகிறது. நாட்டுக்கு எதிராக சதி திட்டங்கள் தீட்டுபவர்களை கண்டறிய இந்த மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால்,முறைகேடாக பயன்படுத்தப்படு வதாக புகார் எழுந்துள்ளதால் இதுகுறித்து விசாரணை நடத்த என்எஸ்ஓ உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் நேஷனல் பப்ளிக் ரேடியோ, என்எஸ்ஓ நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
பெகாசஸ் மென்பொருள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தொடர்பான புகார் குறித்து உள் விசாரணை நடைபெற்று வருகிறது. இதன் அடிப்படையில் சில வாடிக்கையாளர்கள் (நாடுகள்) இந்த மென்பொருளை பயன்படுத்த தற்காலிகமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களின் கேள்விகளுக்கு இனி என்எஸ்ஓ பதில் அளிக்காது. மேலும் ஊடகங்களின் இதுபோன்ற தீய மற்றும் அவதூறு பிரச்சாரங்களுக்கு என்எஸ்ஒ பொறுப்பேற்காது என அந்த அதிகாரி தெரிவித்தார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-பிடிஐ