நைஜீரியாவில் உள்ள டேலோரி என்ற கிராமத்தில் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் பல குழந்தைகள், பெண்கள் உட்பட 86 பேர் பலியானதாக அஞ்சப்படுகிறது.
சனிக்கிழமை நள்ளிரவு போகோ ஹராம் நடத்திய இந்தத் தாக்குதலிலிருந்து தப்பிய ஒரு நபர் மரத்தின் கிளைகளில் மறைந்திருந்து தான் கண்ட கொடூர காட்சிகளை அசோசியேட் பிரஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார்.
எரிந்த நிலையில் உடல்களும், தோட்டாக்காயங்களுடனான சடலங்களும் தெரு முழுதும் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்த அந்த நபர் தெரிவித்துள்ளார்.
சுமார் 25,000 அகதிகள் தங்கவைக்கப் பட்டிருந்த 2 முகாம்கள் மீது போகோ ஹராம் ஈவு இரக்கமின்றி பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியுள்ளது.
போகோ ஹராம் உருவான மைதுகுரி என்ற பெரிய நகருக்கு அருகில்தான் இந்த பரிதாபத்துக்குரிய டேலோரி கிராமம் உள்ளது.
சுமார் 4 மணி நேரம் துப்பாக்கிச் சூடு, குண்டு வெடித்தல் என்று தற்கொலைத் தாக்குதல் கோரத்தாண்டவம் ஆடியுள்ளது. சுத்தமாக கைவிடப்பட்ட நிலையில் வசித்து வரும் அகதிகளாவர் இவர்கள்.
ஞாயிறு மதியம் 86 சடலங்களை ராணுவம் கைப்பற்றியது. மேலும் 62 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வடகிழக்கு நைஜீரியாவில் ராணுவம் போகோ ஹராம் தீவிரவாதிகளை விரட்டியது முதல் இது போன்று பாதுகாப்பற்ற, கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் அகதிகள் போன்றவர்களை தற்கொலைத் தாக்குதலில் போகோ ஹராம் அழித்து வருகின்றனர்.
கடந்த 6 ஆண்டுகளாக போகோ ஹராம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு சுமார் 20,000 பேர் பலியாகி, சுமார் 20 லட்சம் பேர் வீடுகளை விட்டு அகதிகளாக வெளியேற நேரிட்டுள்ளது.