இராக்கில் தற்போதைய நிலவரம் குறித்து கண்டறிய, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி பாக்தாத் பயணம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது அங்கு நடக்கும் உள்நாட்டுப் போர் குறித்து இராக் அரசிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்லாமிக் ஸ்டேட் ஆஃப் இராக் அண்ட் லெவன்ட் அமைப்பு, இராக்கின் முக்கிய வளம்மிக்க நகரங்களை கைப்பற்றி, தலைநகர் பாக்தாத் நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஜான் கெர்ரி, தலைநகர் பாக்தாத் விரைந்துள்ளார். அங்கு அவர் இராக் ராணுவ உயர் அதிகாரிகள், வெளியுறவு துறை அதிகாரிகள் மற்றும் பிரதமர் நூரி அல் மாலிக்கை சந்திக்கிறார்.
இந்த சந்திப்பில் உள்நாட்டு போர் மற்றும் அதன் நிலவரம் குறித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என இராக் வெளியுறவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இ.எஸ்.இ.எல் அமைப்பு ஏற்கெனவே மிகப் பெரிய நகரான மொசூலை கைப்பற்றி, பாக்தாதை ஒட்டிய சிறு நகரங்களை நேற்று சுற்றிவளைத்தை அடுத்து ஜான் கெர்ரி அங்கு விரைந்திருப்பது என்பது குறிப்பிடதக்கது.