உலகம்

உலகம் முழுவதும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் உட்பட 50 ஆயிரம் பேரின் செல்போன் தகவல் திருட்டு: இஸ்ரேலின் ‘பெகாசஸ்' உளவு மென்பொருளை பயன்படுத்தியதாக புகார்

செய்திப்பிரிவு

இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருள் மூலம் உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை போராளிகள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50 ஆயிரம் பேரின்செல்போன் தகவல் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக `தி கார்டியன்’ நடத்திய விசாரணையில், சர்வாதிகார அரசுகள் இத்தகைய தகவல்திருட்டுக்கு பின்புலமாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. 2016-ம்ஆண்டிலிருந்து பெகாசஸ் மால்வேர் சாஃப்ட்வேர் தொடர்ந்து சர்ச்சையில் இடம்பெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் போராட்டக் குழுவுக்கு தேவையான தகவல்களை இந்த உளவு மென்பொருள் அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் இம்முறை இஸ்ரேலைச்சேர்ந்த சிறிய நிறுவனங்களின் மென்பொருள் மூலம் தகவல் திருட்டு உலகம் முழுவதும் நடத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில் `வாஷிங்டன் போஸ்ட்’, `தி கார்டியன்’, `லே மோன்ட்’ ஆகிய ஊடக நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. ஏறக்குறைய 50 ஆயிரம்பேரின் ஸ்மார்ட்போன்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மெக்சிகோவில் மட்டும் 15 ஆயிரம் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ளன. இதில் அரசியல்வாதிகள், ஆளும் கட்சியினர், பத்திரிகையாளர்கள், அரசு விமர்சகர்கள் ஆகியோரது செல்போன்களும் அடங்கும் என தெரிவித்துள்ளது.

மெக்சிகோவைச் சேர்ந்த பத்திரிகையாளரின் ஸ்மார்ட்போன் எண்ணும் இடம்பெற்றுள்ளது. இவர் காரை சுத்தப்படுத்தும் மையத்தில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். ஆனால் இவர் பயன்படுத்திய ஸ்மார்ட்போன் இதுவரை கிடைக்கவேயில்லை. அவரது போனில்இருந்த தகவல்கள் திருடப்பட்டனவா என்ற விவரமும் தெரியவில்லை என `கார்டியன்’ வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட் டுள்ளது.

இந்தியாவில் 300 பேர்

இந்தியாவைச் சேர்ந்த இணையதள செய்தி நிறுவனமான `தி வயர்’,இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், 2 மத்திய அமைச்சர்கள் உட்பட 300 பேரின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. இதில் அமைச்சர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், விஞ்ஞானிகள், மனித உரிமை போராளிகள் ஆகியோரது ஸ்மார்ட்போன் எண்களும் அடங்கும் என குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் முன்னணிபத்திரிகைகளான `தி இந்து’, `தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’, `ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ ஆகியவற்றில் பணி புரியும் மூத்த பத்திரிகையாளர்களின் ஸ்மார்ட்போன் தகவல்கள் திருடப்பட்டுள்ள தாக `தி வயர்’ தனது புலனாய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.

தகவல் திருடப்பட்டதாக இடம்பெற்ற பட்டியலில் ஏஎப்பி, வால் ஸ்ட்ரீட், சிஎன்என், நியூயார்க் டைம்ஸ், அல் ஜஸீரா, பிரான்ஸ் 24, ரேடியோ பிரீ யூரோப், மீடியாபார்ட், எல் பாரிஸ், அசோசியேடட் பிரஸ், லே மோன்ட், புளூம்பெர்க், எகனாமிஸ்ட், ராய்ட்டர்ஸ், வாய்ஸ் ஆப்அமெரிக்கா, கார்டியன் ஆகியவற்றின் பத்திரிகையாளர்களின் எண்களும் அடங்கும் என தெரியவந்துள்ளது.

பெகாசஸ் உளவு சாப்ட்வேரானது ஸ்மார்ட்போன் கேமிரா மற்றும் மைக்ரோபோனை மட்டுமே குறிவைத்து தகவல்களை திருடும்.

நேற்று இது தொடர்பாக என்எஸ்ஓ குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. தவறான தகவலை வெளியிட்டதற்காக `வாஷிங்டன் போஸ்ட்’ மீது மான நஷ்ட வழக்கு தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளது. ஜமால் கஷோகி படுகொலைக்கும் தங்கள் நிறுவன முன்னேறிய தொழில்நுட்பத்துக்கும் தொடர்பில்லை என தெரிவித்திருந்தது.

SCROLL FOR NEXT