சஞ்சால் கவான்டே 
உலகம்

விண்வெளிக்கு செல்லும் 5-வது இந்தியர் சஞ்சால் கவான்டே: அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் உடன் ராக்கெட்டில் இன்று பயணம்

செய்திப்பிரிவு

விண்வெளிக்குச் செல்லும் 5-வது இந்தியர் என்ற பெருமையை மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் சஞ்சால் கவான்டே பெறவுள்ளார்.

அமெரிக்காவின் விண்வெளி சுற்றுலா நிறுவனமான வர்ஜின் கேலக்டிக் தயாரித்த ராக்கெட் விமானம் மூலம் அதன் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்சன், இந்தியவம்சாவளி பெண் சிரிஷா பண்ட்லாஉள்ளிட்ட 6 பேர்் கடந்த வாரம் விண்வெளிக்குச் சென்று வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார். அடுத்த ஆண்டு முதல் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்ல பிரான்சனின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதேபோல, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் (57) ‘புளூ ஆரிஜின்’ என்ற விண்வெளி நிறுவனமும் விண்வெளி சுற்றுலாவில் தடம்பதிக்க முடிவு செய்துள்ளது. இதன் முதல்கட்டமாக இந்த நிறுவனம் தயாரித்துள்ள ராக்கெட் மூலம் இன்று ஜெஃப் பெசோஸ் விண்வெளிக்கு செல்லவுள்ளார். இதில் அவரது சகோதரர், மும்பையைச் சேர்ந்த பெண் சஞ்சால் கவான்டே உட்பட 4 பேரும் அவருடன் பயணிக்க உள்ளனர்.

இந்தியாவிலிருந்து விண்வெளிக்குச் சென்ற ராகேஷ் சர்மா, கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ், சிரிஷா பண்ட்லா ஆகியோரது வரிசையில் தற்போது சஞ்சால் கவான்டேவும் இடம்பெறவுள்ளார். மேலும் விண்வெளிக்குச் செல்லும் 5-வது இந்தியப் பெண் என்ற பெருமையையும் அவர் பெறவுள்ளார்.

இதுகுறித்து மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் பகுதியைச் சேர்ந்த சஞ்சால் (30) கூறும்போது, “சிறுவயது முதலே விண்வெளிக்குச் செல்ல வேண்டும் என்பதுதான் எனது கனவு. தற்போது எனது கனவு நிறைவேறப் போகிறது. நான் மும்பை பல்கலைக்கழகத்தில் எம்.இ. படிப்பை முடித்துவிட்டு, அமெரிக்காவின் மிச்சிகன் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். பல்வேறு இடங்களில் பணிபுரிந்துவிட்டு தற்போது புளு ஆரிஜன் டீமில் இணைந்தேன்.

2016-ம் ஆண்டில் நாசாவில் சேர்வதற்காக விண்ணப்பித்தேன். ஆனால் அந்த வேலை எனக்குக் கிடைக்கவில்லை" என்றார்.

SCROLL FOR NEXT