உலகம்

உலக மசாலா: கலக்கிட்டீங்க டயானா!

செய்திப்பிரிவு

கொலம்பியாவைச் சேர்ந்த டயானா பெல்ட்ரன் ஹெர்ரெரா வண்ணக் காகிதங்களில் அற்புதமான பறவைகளை உருவாக்கி விடுகிறார். நிஜப் பறவைகள் போலவே இருக்கும் இந்தக் காகிதப் பறவைகளுக்கு வண்ணக் காகிதங்களுடன் கொஞ்சம் பசையும் கத்தரிக்கோல்கள் மட்டுமே தேவை என்கிறார் டயானா. ‘’காகிதப் பறவைகளுக்கு முன்பு நான் மரங்களில் பலவித உருவங்களை உருவாக்கிக்கொண்டிருந்தேன். மீன்கள், விலங்குகள், பழங்கள் போன்றவற்றை விரும்பிச் செய்து வந்தேன். ஒரு கண்காட்சி நடத்தினேன். வேறு புதுமையாக என்ன செய்யலாம் என்று யோசித்தபோது காகிதப் பறவைகள் செய்யும் யோசனை உதித்தது. கொலம்பியாவில் வசிக்கும் பறவைகள் ஒவ்வொன்றையும் உற்று நோக்கினேன். அத்தனை பறவைகளையும் காகிதங்களில் கொண்டு வர விரும்பினேன். ஒரு பறவை உருவாக வேண்டும் என்றால் என்னென்ன வண்ணக் காகிதங்கள் தேவைப்படும் என்பதை முதலில் யோசித்து, வாங்கி வைத்துக்கொள்வேன். பிறகு ஒவ்வொரு பகுதியையும் அழகாக வெட்டுவேன். பசை கொண்டு ஒட்டிவிடுவேன். ஒரு பறவையை உருவாக்க 5 முதல் 14 நாட்கள் வரை ஆகும். வண்ணக் காகிதப் பறவைகளைச் செய்வதற்காகத் தொடர்ந்து பறவைகள் பற்றி படித்து வருகிறேன். பறவைகளைச் செய்யும்போது மனம் புத்துணர்வு பெறுகிறது. ஒவ்வொரு பறவையை முடிக்கும்போதும் குழந்தையைப் போல என் மனம் குதூகலிக்கிறது’’ என்கிறார் டயானா.

கலக்கிட்டீங்க டயானா!

நியுயார்க்கைச் சேர்ந்தவர் டெர்ரெல் ஃபின்னர். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். கடந்த வாரம் சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டார். அதில் மூக்கில் இரண்டு குழாய்கள், கையில் ஒரு குழாய் செருகப்பட்டிருந்தன. ’’ஹெட்போனை மூக்குக்குள் வைத்தேன். மேக்புக் சார்ஜரை என் கைக்கு அடியில் வைத்துக்கொண்டேன். புகைப்படங்கள் எடுத்தேன். என்னைப் பார்ப்பவர்களுக்கு மருத்துவமனை படுக்கையில் இருப்பது போலத் தோன்றும். இந்தப் படங்களை என் கெமிஸ்ட்ரி புரொபசருக்கு அனுப்பிவைத்தேன். மூக்கில் இருந்து ரத்தம் வருவதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன். என்னால் பரீட்சை எழுத முடியாது என்று குறிப்பிட்டிருந்தேன். உலகம் முழுவதும் என்னுடைய புகைப்படங்கள் பரவிவிட்டன. 6 நாட்களுக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து நலமுடன் வீடு திரும்பிவிட்டேன். உங்கள் அத்தனைப் பேரின் வேண்டுதல்களுக்கும் நன்றி என்று தகவல் போட்டேன். எல்லோரும் என் புகைப்படம் பார்த்து உண்மை என்று நம்பிவிட்டனர். இது ஹெட்போன், மேக்புக் சார்ஜர் என்று யாரும் கண்டுபிடிக்கவில்லை’’ என்கிறார் டெர்ரெல். பல்கலைக்கழகத்தில் நகைச்சுவையாகவும் புத்திசாலித்தனமாகவும் பல விஷயங்களைச் செய்து வரும் டெர்ரெலின் இந்த நடவடிக்கையை பலர் பாராட்டுகிறார்கள். சிலரோ எப்படி எல்லோரையும் ஏமாற்றியிருக்கிறார் என்று கோபத்தில் இருக்கிறார்கள்.

உங்க க்ரியேட்டிவிட்டியை நல்ல விதமாகப் பயன்படுத்தக்கூடாதா டெர்ரெல்?

SCROLL FOR NEXT