கியூபாவில் அரசாங்கத்துக்கு எதிராக நடந்துவரும் போராட்டத்திற்கு அமெரிக்கா தனது ஆதரவை வழங்கியுள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பொருளாதாரச் சரிவு மற்றும் கரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை திரளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு மற்றும் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை அரசாங்கம் கைது செய்துள்ளது” என்று செய்தி வெளியானது.
இந்த நிலையில் கியூபாவில் நடைபெறும் போராட்டத்துக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, “கியூபாவில் சர்வாதிகார ஆட்சியால் பல வருடங்களாக அடக்குமுறை மற்றும் பொருளாதாரத் துன்பங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம்” என்றார்.
இந்த நிலையில் அரசுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக கியூபா குற்றம் சுமத்தியுள்ளது.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசியைச் சில நாட்களுக்கு முன்னர் கியூபா அறிமுகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாகவே கியூபாவில் போராட்டங்கள் அதிகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.