உலகம்

ஷேர் பகதூரை பிரதமராக்குக: எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் நேபாள உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

செய்திப்பிரிவு

ஷேர் பகதூர் தூபாவை நேபாளத்தின் பிரதமராக நியமிக்குமாறு அந்நாட்டுக் குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரிக்கு அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், கலைக்கப்பட்ட நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையை மீண்டும் நிலைநிறுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

நேபாள உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அந்நாட்டின் கம்யூனிஸ்ட் தலைவர் கே.பி.சர்மா ஒலிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

முன்னதாக தலைமை நீதிபதி சோலேந்திரா சும்ஷேர் ரானா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியது. நேபாள நாடாளுமன்றத்தில் கீழவையைக் கலைக்குமாறு பிரதமர் கே.பி.ஷர்மா ஒலியின் பரிந்துரையை ஏற்று அவையை குடியரசுத் தலைவர் பண்டாரி கலைத்து உத்தரவிட்டது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தூபாவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்றும் ஜூலை 18 மாலை 5 மணிக்குள் நாடாளுமன்ற கீழவையின் புதிய கூட்டத்தைக் கூட்டுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் நேபாள நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தோல்வியடைந்தார். ஆனால், எதிர்க்கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாத நிலையில், மீண்டும் கே.பி. சர்மா ஒலியையே பிரதமராக நியமித்தார் அதிபர். அவருக்கு பெரும்பான்மையை நிரூபிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

ஆனால், இந்த முறையும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. இந்நிலையில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த ஒலி பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற குடியரசுத் தலைவர் பித்யா தேவி பண்டாரி, கீழவையான பிரதிநிதிகள் சபையை கலைத்து, பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகளை அறிவித்தார்.

இதனை எதித்து எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 146 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உச்ச நீதிமன்றத்தை நாடினர். இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால், நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் கே.பி.ஷர்மா ஒலியின் இடைத்தேர்தலை நடத்தும் திட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.

SCROLL FOR NEXT