உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று இன்னமும் குறையவில்லை, எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்ட கரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வருகிறது. கரோனா வைரஸ் மட்டுமல்லாமல், அதிலிருந்து உருமாற்றம் அடைந்த வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. சர்வதேச அளவில் கரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறி கொண்டிருக்கிறது.
இந்தியாவிலும் இதன் பாதிப்பு காணப்படுகிறது. இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா 2-வது அலை உச்சத்தில் இருந்தது. அப்போது சில நாட்கள் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. கரோனா 2-வது அலைக்கு டெல்டா வகை வைரஸே காரணம் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தற்போது சில மாநிலங்களில் டெல்டா பிளஸ் வகை வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வரிசையில் உத்தர பிரதேசத்தில் கரோனா கப்பா வகை வைரஸ் பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானியான செளமியா சுவாமிநாதன் கூறியதாவது:
உலக அளவில் கரோனா வைரஸ் தொற்று இன்னமும் குறையவில்லை. சில நாடுகளில் உயர்ந்து வருகிறது. எனவே மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5 லட்சம் பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 9300 பேர் பலியாகியுள்ளனர். உலகின் மொத்தமுள்ள 6 பகுதிகளில் 5 பகுதிகளில் கரோனா தொற்று மீண்டும் உயர்ந்து வருகிறது.
ஆப்ரிக்க கண்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 30 முதல் 40 சதவீதம் அளவுக்கு தொற்று உயர்ந்துள்ளது. கரோனா தொற்று வேகமாக பரவி வருவதற்கு டெல்டா வகையைச் சேர்ந்த கரோனா வைரஸே காரணம். வைரஸ் பரவலை தடுக்கக்கூடியது தடுப்பூசி மட்டுமே. ஆனால் பல நாடுகளில் தடுப்பூசி செலுத்துவது ஆமை வேகத்தில் நடக்கிறது.
எனவே தற்போதைய சூழலில் சமூக இடைவெளி, முககவசம் மற்றும் கட்டுப்பாடுகள் மட்டுமே பயனளிக்கிறது. எனவே கரோனா தளர்வுகளை அறிவிக்கும்போது ஒவ்வொரு நாடுகள் கவனத்துடன் கையாள வேண்டும். ஊரடங்கு தளர்வால் மீண்டும் கரோனா பரவி விடக்கூடாது. பொருளாதார தேவை இருக்கும் அதேசமயம் மனித குலத்தின் பாதுகாப்பு விஷயத்திலும் கவனம் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.