உலகம்

பாகிஸ்தானில் கரோனா நான்காம் அலை

செய்திப்பிரிவு

கரோனா நான்காம் அலையின் தொடக்கத்தில் பாகிஸ்தான் இருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து திட்டமிடல் அமைச்சகத்தின் அசாத் உமர் கூறும்போது, “கரோனா நான்காம் அலையின் தொடக்கத்தில் பாகிஸ்தான் உள்ளதற்கான தெளிவான அறிகுறிகள் தெரிகின்றன. இதனைக் கடந்த வாரமே கூறினோம். ராவல் பிண்டியில் மட்டும் 15 பேருக்கு டெல்டா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கரோனா குறித்த விழிப்ப்புணர்வுடன் மக்கள் இருக்க வேண்டும்” என்றார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானில் தினசரி கரோனா பாதிப்பு ஆயிரத்தைக் கடந்து வருகிறது. பாகிஸ்தானில் இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கண்டறியப்பட்ட வைரஸ்களில் டெல்டா வைரஸ்தான் அதிகத் தொற்றுத் தன்மை கொண்டது. 85 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவியுள்ளது. தடுப்பூசி போடதவர்களிடம் டெல்டா வைரஸ் வேகமாகப் பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலக அளவில் கரோனா அலையின் வேகம் சற்று தணிந்துள்ளபோதிலும் முற்றாக நீங்கவில்லை. அதேசமயம் ஒருசில நாடுகளில் அதன் தாக்கம் தீவிரமாகவே இருந்து வருகிறது. கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், ரஷ்யா ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 17 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 39 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT