கரோனா பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை. ஆகையால் மக்கள் வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியில் செல்வதன் அவசியம், அவசரம் கருதி மக்கள் செயல்பட வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஜூலை 19ம் தேதி முதல் பிரிட்டனில் ஊரடங்கில் பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்படவுள்ளன. அதற்கான திட்டத்தை அநாட்டுப் பிரதமர் இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரிட்டனில் மீண்டும் கரோனா பரவல் சற்று அதிகரித்து வருகிறது. இப்போது அங்கு தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் அனைவருமே கரோனா டெல்டா வைரஸால் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளிலேயே ரஷ்யாவுக்குப் பின்னர் பிரிட்டனில் தான் அதிகப்படியான கரோனா உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டனில் இதுவரை 1,28,000 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அங்கு, மூன்றாம் முறையாக விதிக்கப்பட்ட ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்பட்டு வருகிறது.
வரும் 19ம் தேதியன்று அங்கு ஊரடங்கு விலக்கு அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. பிரிட்டனில் இதுவரை இரவு நேர கேளிக்கை விடுதிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பப்களிலும் சேவைகளுக்குக் கட்டுப்பாடு இருக்கிறது. பொது நிகழ்ச்சிகளுக்கு முழுமையான அளவில் அனுமதியில்லை.
முழு ஊரடங்கு விலக்கை அளிக்கும்போது கரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் ஆனால் கரோனா மரணங்கள் கணிசமாகக் குறைந்திருக்கிறது. அதற்கு, தடுப்பூசி திட்டமே காரணம் என அரசு கூறியிருக்கிறது.
உலகிலேயே முதன்முறையாக கடந்த டிசம்பர் மாதம் பிரிட்டன் தான் கரோனாவுக்கு எதிராக தடுப்பூசியைக் கொண்டுவந்தது. இன்றைய தேதியில் பிரிட்டன் தனது மக்கள் தொகையில் வயதுவந்தோரில் 64% பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியை செலுத்தியிருக்கிறது.
இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த போரிஸ் ஜான்சன், "மக்களுக்கு முழு சுதந்திரத்தை வழங்குவது குறித்து ஆலோசித்து வருகிறோம். கரோனா பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை. ஆகையால் மக்கள் வைரஸுடன் வாழப் பழகிக்கொள்ள வேண்டும். ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் கூட உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியில் செல்வதன் அவசியம், அவசரம் கருதி மக்கள் செயல்பட வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.