துபாய் லாட்டரியில் இந்தியர் உள்பட 10 பேருக்கு ரூ.40.5 கோடி ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது.
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ரஞ்சிச் சோமராஜன். இவர்ஐக்கிய அரபு அமீரக நாட்டிலுள்ள அபுதாபி நகரில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக இவர் துபாயில் நடைபெறும் லாட்டரி பரிசுச் சீட்டுகளை வாங்கி வருகிறார். இந்நிலையில் அவருக்கும் அவரது நண்பர்கள் 9 பேருக்கும் கடந்த வாரம் நடைபெற்ற லாட்டரி குலுக்கலில் 20 மில்லியன் திர்ஹாம் பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.40.5 கோடியாகும்.
இத்தகவலை துபாயிலிருந்து வெளியாகும் கலீஜ் டைம்ஸ் பத்திரிகை செய்தியாக வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து ரஞ்சித் சோமராஜன் கூறும்போது, “நான் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வருகிறேன். துபாய், அபுதாபி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் வேலைபார்த்துள்ளேன். அவ்வப்போது லாட்டரிச் சீட்டுகளை வாங்குவேன். ஆனால் பரிசு கிடைத்ததில்லை. இம்முறை பரிசு கிடைக்கும் என்று நம்பி பரிசுச் சீட்டை வாங்கினேன்.
இதில் எனக்கும் எனது நண்பர்கள் 9 பேருக்கும் சேர்த்து ரூ.40.5 கோடி பரிசு கிடைத்துள்ளது. எனக்கு முதல்பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. 2-வது அல்லது 3-வது பரிசை குறிவைத்தே நான் லாட்டரிச் சீட்டு வாங்கினேன். பரிசு கிடைத்தது முதல் எனது செல்போனில் வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளன.
பரிசுப் பணத்தை நானும்நண்பர்களும் பகிர்ந்து கொள்வோம். என்னுடைய நண்பர்கள் 9 பேரும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார்கள். அனைவரும் சேர்ந்து பணம் போட்டு லாட்டரி வாங்கினோம்.
ஜூன் 29-ம் தேதி நடந்தகுலுக்கலில் பரிசு கிடைத்துள்ளது. என்னுடைய பெயரில்தான் இந்த லாட்டரி டிக்கெட் வாங்கப்பட்டது. எனக்கு ஒருநாள் அதிர்ஷ்டம் வரும் என்றுநம்பினேன். அந்த நாள் வந்தே விட்டது" என்றார்.