உருமாறிய கரோனா டெல்டா வைரஸ் ஆபத்தானது. அது மேலும், மேலும் திரிந்து கொண்டே இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் எச்சரித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:
கரோனா வைரஸ் உலகை ஆட்கொண்ட காலம்தொட்டு இப்போது நாம் மிகுந்த ஆபத்தான காலகட்டத்தில் இருக்கிறோம். உருமாறிய கரோனா டெல்டா வகை வைரஸ் தற்போது உலகின் பல பகுதிகளிலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை, எந்த ஒரு நாடுமே கரோனா ஆபத்தைவிட்டு விலகிவிட்டது என்று கூறமுடியாத நிலையிலேயே இருக்கிறது. டெல்டா திரிபு ஆபத்தானதாக உள்ளது. இது மென்மேலும் திரிந்து கொண்டே இருக்கிறது. இதுவரை 98 நாடுகளில் டெல்டா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் குறிப்பாக எந்த நாடுகளில் எல்லாம் தடுப்பூசித் திட்டம் மிகவும் குறைந்த வேகத்தில் செயல்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் டெல்டா வைரஸ் பரவல் அதிகமாக இருக்கிறது.
பொது சுகாதாரத்தைப் பேணும் நடவடிக்கைகளை எல்லா நாடுகளுமே முடுக்கிவிட வேண்டும். கரோனா பாதிப்பு குறித்து தீவிர கண்காணிப்பைக் கைவிடவே கூடாது. பரிசோதனைகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். கரோனா நோயாளிகளை உடனே கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்தும் பணியைத் தொடர வேண்டும்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல், கூட்டமான பகுதிகளை தவிர்த்தல் போன்றவற்றை பொதுமக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். வீடுகளிலேயே இருந்தாலும், வீட்டிலும் வெளிச்சமும் காற்றும் போதுமான அளவுக்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
உலக நாடுகள் தங்களுக்குள் மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்களை சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். உலக நாடுகள் ஒன்றிணைந்து அடுத்த ஆண்டு ஜூலைக்குள் சர்வதேச மக்கள் தொகையில் 70% பேருக்காவது தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
இதுமட்டுமே உலக மக்களின் உயிரைக் காப்பாற்ற, கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த ஒரே சிறந்த வழி. வரும் செப்டம்பர் மாதத்துக்குள் உலக நாடுகள் ஒவ்வொன்றுமே தங்கள் மக்கள் தொகையில் 10% பேருக்காவது தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம்.
அதேபோல், எம்ஆர்என்ஏ mRNA தடுப்பூசிகளைத் தயாரிக்க உலக நாடுகள் ஊக்குவிக்கப்படுகின்றன. இதில் பயோஎன்டெக், ஃபைஸர், மாடர்னா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுக்குத் தெரிந்த மருந்து தயாரிப்பு விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
இப்போதுவரை 98 நாடுகளில் டெல்டா திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்டா திரிபுகள் மட்டும்தான் இனி கரோனா சவாலில் பெரிய அச்சுறுத்தலாக இருக்கப்போகின்றன.
இப்போதைக்கு நடைமுறையில் உள்ள கரோனா தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள், நடவடிக்கைகள் டெல்டா வைரஸ்களையும் திறம்பட சமாளிப்பதால் அதனைப் பின்பற்றத் தவற வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.