இந்தோனேசியாவில் மாடர்னா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய சுகாதாரத் துறை தரப்பில், “ இந்தோனேசியாவில் கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு, மாடர்னா கரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது. இந்தோனேசியாவுக்கு இதுவரை 40 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள் கோவாக்ஸ் பகிர்வு திட்டத்தின் கீழ் தரப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக 20,000 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தலைநகர் ஜகார்த்தா, ஜாவா பகுதிகளில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
மால்கள், மசூதிகளில் மக்கள் செல்வதற்கு அடுத்த இருவாரங்களுக்கு தடைவிதிக்கப்படும் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் கட்டுப்பாடுகளை அதிகரிக்கவும் அரசு ஆலோசித்து வருகிறது.
இந்தோனேசியாவில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. இதன் காரணமாக கரோனா தடுப்பூசியை விரைவாக செலுத்தி எதிர்காலத்தில் ஏற்படும் அலைகளை தடுப்பூசிகள் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.