உலகம்

பக்ரம் விமான தளம்: 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறிய அமெரிக்கப் படைகள்

செய்திப்பிரிவு

20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானின் பிரபல பக்ரம் விமான தளத்திலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியுள்ளன.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “பக்ரம் விமான தளத்திலிருந்த அனைத்து அமெரிக்க படையினரும் வெளியேறியுள்ளனர். அமெரிக்கப் படையினர் வெளியேறிய விமான தளம் எப்போது ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைக்கப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. எனினும் பக்ரம் விமானத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைக்க ஆப்கான் ராணுவம் தயாராகி வருகிறது.

அமெரிக்கா ராணுவம் பக்ரம் விமான தளத்திலிருந்து சுமார் 20 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியேறுகிறது. அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ராணுவத்தினர் மற்றும் நேட்டோ படைப் பிரிவினர். செப்டம்பர் மாதத்துக்குள்ளாக முற்றிலுமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற இருக்கிறார்கள்” என்றார்.

தலிபான்களுக்கு எதிராக தாக்குதலுக்கு பக்ரம் விமானத் தளத்தை அமெரிக்க படையினர் பயன்படுத்தினர்.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களை திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் ஜோ பைடன் நிர்வாகமும் இம்முடிவைத் தொடர்கிறது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சிக் காலம் முதலே அங்கு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன.

அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டது.

கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்க தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

SCROLL FOR NEXT