உடல் இளைப்பதற்கு உலகம் முழுவதும் என்னென்னவோ வழிமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள். அந்த வகையில் புதிதாக இணைந்திருக்கிறது ‘டென்டல்ஸ்லிம் டயட் கண்ட்ரோல்’. இந்தக் கருவியை வாயில் பொருத்திக்கொண்டால், 2 மி.மீ. மட்டுமே வாயைத் திறக்க முடியும். உணவுப் பொருள் எதையும் வாய்க்குள் போடவும் முடியாது, மெல்லவும் இயலாது. நீர் ஆகாரத்தை மட்டுமே பருக முடியும். சுவாசிக்க முடியும். பேச முடியும்.
நியூசிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உடலை இளைக்க வைக்கும் இந்தக் கருவியை உருவாக்கியிருக்கிறார்கள். மிகச் சிறிய இந்தக் கருவியை மேல்தாடைப் பற்களும் கீழ்த்தாடைப் பற்களும் இணையும் விதத்தில் பொருத்திவிடுகிறார்கள். அதற்குப் பிறகு வாயைத் திறக்கவே முடியாது. வழக்கம்போல் பேசலாம், சுவாசிக்கலாம், நீர் ஆகாரம் குடிக்கலாம். இந்த டென்டல்ஸ்லிம் டயட் கண்ட்ரோல் கருவிக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
டென்டல்ஸ்லிம் கருவியைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு எடையை இழந்துவிட்டால், பிறகு கருவியை எடுத்துவிடலாம். குறைந்த அளவு உணவை உட்கொள்ளலாம். மீண்டும் எடை அதிகரித்தால், மருத்துவரிடம் சென்று டென்டல் ஸ்லிம் கருவியைப் பொருத்திக்கொள்ளலாம்.
“இந்தக் கருவி இயற்கைக்கு மாறாக எதையும் செய்யவில்லை. உணவு உட்கொள்ளும் அளவைக் குறைக்க இரைப்பை அறுவை சிகிச்சைகூடச் செய்கிறார்கள். அது நிரந்தரமானது. தேவையான போது அதை மாற்றிக்கொள்ள இயலாது. ஆனால், டென்டல்ஸ்லிம் அப்படியில்லை. வலி இருக்காது. பாதிப்பு இருக்காது. தேவையில்லாவிட்டால் அதை நீக்கிவிடுவதும் சுலபம். தேவையானபோது மீண்டும் பொருத்திக்கொள்வதும் எளிது. டென்டல்ஸ்லிம் கருவியைப் பயன்படுத்தியவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. ஏனென்றால் அவர்களுக்கு இதன் மகத்துவம் புரியும். பயன்படுத்தாதவர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். டென்டல் ஸ்லிம் கருவியைப் பொருத்துவதால், இரண்டே வாரங்களில் சுமார் 6.5 கிலோ எடையை எளிதாக இழக்க முடிகிறது. உடல் எடையைக் குறைப்பதற்காக பலவற்றையும் முயன்று பார்த்தவர்கள், டென்டல்ஸ்லிம் மூலம் எளிதாக எடையைக் குறைத்திருக்கிறார்கள். இந்தக் கருவியை நிரந்தரமாக யாருக்கும் பரிந்துரைப்பதில்லை.
குறிப்பிட்ட காலம் திரவ உணவைச் சாப்பிட்டு, எடை குறைப்பவர்கள் பெரும்பாலும் அதே உணவுப் பழக்கத்தைதான் மேற்கொள்கிறார்கள். அதனால், அவ்வளவு எளிதாக எடை அதிகரிக்கும் வாய்ப்பும் இல்லை. அப்படியே அதிகரித்தாலும் மீண்டும் கருவியைப் பொருத்திவிடலாம். ஏதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டியவர்கள், உடல் எடையை உடனடியாகக் குறைக்க வேண்டும் என்றால் அதற்கு டென்டல்ஸ்லிம்தான் இப்போதைக்கு ஒரே எளிய தீர்வு” என்கிறார் ஒடாகோ சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பால் ப்ரண்டன்.