உலகம்

டெல்டா வைரஸுக்கு எதிராக 90% தடுப்பாற்றல் கொண்டது ஸ்புட்னிக் V தடுப்பூசி: ரஷ்யா தகவல்

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் டெல்டா, டெல்டா பிளஸ் எனத் திரிந்து உருமாறி அச்சுறுத்தி வரும் நிலையில், அத்தனை வகையான டெல்டா திரிபுகளுக்கு எதிராகவும் ஸ்புட்னிக் V தடுப்பூசி 90% திறம்பட செயல்படுவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

கரோனாவுக்கு எதிராக இந்தியாவில் கோவாக்சின், கோவில்ஷீல்டு, ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், வெளிநாடுகளில் ஃபைஸர், மாடர்னா தடுப்பூசிகளும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் V தடுப்பூசிகளிலும் பயன்பாட்டில் உள்ளன. சீனாவிலும் அதன் நட்பு நாடுகளிலும் சைனோவாக் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கரோனா வைரஸ் பல்வேறு விதமாக உருமாறி அதில் டெல்டா வகை திரிபு மட்டும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக உலகை அச்சுறுத்தி வருகின்றன.

இந்தியாவில் கண்டறியப்பட்ட ‘டெல்டா வைர’ஸின் மரபணு வரிசையில் ‘K417N’ எனும் புதிய திரிபு (Mutation) ஏற்பட்டுள்ளது. இந்த வேற்றுருவத்துக்கு ‘டெல்டா பிளஸ் வைரஸ்’ (B.1.617.2.1 அல்லது AY.1) எனப் பெயரிடப்பட்டுள்ளது. பூட்டுக்குள் சாவி நுழைவதுபோல இந்த வைரஸ் நம் உடல் செல்களுக்குள் ‘ஏசிஇ2’ புரத ஏற்பிகளுடன் இணைந்து நுழையும் கூர்ப்புரதங்களில் (Spike proteins) இந்த மாற்றங்களைச் செய்துள்ளது.

இதன் மூலம் செல்களில் கூர்ப்புரதப் பிணைப்புகள் வலுவடைந்து, டெல்டா வைரஸைவிட அதிவேகமாகப் பரவும் தன்மையைப் பெற்று விடுகிறது. மேலும், கரோனாவை ஆரம்பத்தி லேயே முறியடிக்கும் ‘ஒற்றைப்படியாக்க எதிரணு மருந்துகள்’ (Monoclonal antibodies) மற்றும் தடுப்பூசிகளிடமிருந்தும்கூடத் தப்பித்துவிடும் அளவுக்கு வீரியமிக்கதாகக் கருதப்படுகிறது.

அதனால், ‘விஓசி’ (Variant of concern) எனும் கவலை தரும் பிரிவுப் பட்டியலில் மத்திய அரசு இதனை சேர்த்துள்ளது.

ஆனால், இந்தவகை டெல்டா திரிபுகளை தங்களின் ஸ்புட்னிக் V 90% திறம்பட எதிர்க்கும் என அதனைத் தயாரித்த ரஷ்யாவின் காமாலேயா இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸை எதிர்கொள்வதில் ஸ்புட்னிக் V தடுப்பூசி 91.6% தடுப்பாற்றல் காட்டும் நிலையில், அதன் டெல்டா திரிபுகளை எதிர்கொள்வதில் சற்றே குறைவாக 90% தடுப்பாறல் காட்டுகிறது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யாவின் காமாலேயா நிறுவனம் செய்தியாளர் சந்திப்பை ஒருங்கிணைத்தது. அப்போது அதன் துணைத் தலைவர் டெனிஸ் லோகுனோவ், "டெல்டா திரிபுகளுக்கு எதிராக ஸ்புட்னிக் V திறம்பட செயல்படுவதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். சர்வதேச தடுப்பூசி சந்தையை ஒப்பிடும் ஸ்புட்னிக் V அதிகளவில் தடுப்பாற்றல் கொண்டிருக்கிறது" என்றார்.

அதேபோல் அண்மைக்காலமாக ரஷ்யாவில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதற்கு மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அலட்சியம் காட்டுவதும், டெல்டா திரிபுகள் பரவி வருவதுமே காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது ரஷ்யாவில் உள்ள 90% தொற்று டெல்டா திரிபு வைரஸால் ஏற்பட்டதே என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

தடுப்பூசி வேகத்தைக் குறைத்தால் அது கரோனா வைரஸ் புதிதாக பல்வேறு விதமாக உருமாறவே வழிவகுக்கும் என்று காமாலேயா இஸ்ண்டிட்யூட் தலைவர் எச்சரித்துள்ளார். தற்போது இந்தியா உட்பட 65 நாடுகளில் ஸ்புட்னிக் V தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT