அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் டோனால்டு டிரம்ப் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளரான டோனல்ட் டிரம்ப் இத்தகைய வெறுப்புப் பேச்சுக்கு மட்டுமல்ல விவேகமற்ற முறையில், அநாகரிகமாகவும் பேசக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்று அமெரிக்க அரசியல், ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் மெக்ச்கோ நாட்டுக்காரர்கள் அனைவரும் பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் என்றும், ஜான் மெக்கெய்ன் வியட்நாமில் சிறைபிடிக்கப்பட்டதால் அவர் ஒன்றும் போர் நாயகன் அல்ல என்றும் கூறியதோடு மாற்றுத் திறனாளி பத்திரிகையாளர் ஒருவரை கேலி பேசியதும், குடியரசுக் கட்சியின் அதிபர் விவாதத்தின் போது தொலைக்காட்சி பெண் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கடுமையான கேள்வி ஒன்றை கேட்டார், அவர் இத்தகைய கேள்வியைக் கேட்டதற்குக் அவரது மாதவிடாய் காலம்தான் காரணம் என்று கூறி பல சர்ச்சைகளில் சிக்கியவரே இந்த டோனல்ட் டிரம்ப்.
இந்நிலையில் அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் நுழைவதைத் தடை செய்ய வேண்டும் என்று பேசிய அவர், “அனைவரும் அரசியல் சீர்திருத்தப் பார்வையைக் கொண்டுள்ளனர், இதுதான் நம் நாட்டின் பிரச்சினை. தடம் கண்டு, புலனாய்வு செய்ய வேண்டிய மக்கள் தொகுதியினர் உள்ளனர். அது முஸ்லிம்களாக இருந்தால் முஸ்லிம்கள்தான் என்ன செய்வது?” என்று பேசியுள்ளார்.
தீவிரவாத இஸ்லாமியப் போக்குகளுக்கு எதிராக குடியரசுக் கட்சி எப்போதும் கடுமையான நிலைப்பாடுகளை எடுத்து வந்திருந்த போதிலும், அயல்நாட்டில் போர்களை இக்கட்சியினர் ஆதரித்து வந்த போதும் அதன் தலைவர்கள் எவரும் முஸ்லிம்களைப் பற்றி இந்த அளவுக்கு தீவிர கருத்துகளை வெளிப்படுத்தியதில்லை என்றே அமெரிக்க ஊடக வட்டங்கள் தெரிவிக்கின்றன.
இதனால் டிரம்ப் கருத்துக்கு அவரது கட்சியிலிருந்தே எதிர்ப்புக் குரல்கள் கிளம்பியுள்ளன. நியூஜெர்சி ஆளுநர் கிறிஸ் கிறிஸ்டி, டிரம்பின் கூற்றை ‘முட்டாள்தனமானது’ என்று வர்ணித்துள்ளார்.
அமெரிக்காவில் இப்போதெல்லாம் சற்று அயல்நாட்டு குடியேறிகள் மீதும் முஸ்லிம்கள் மீதும் வெறுப்பும் அதிருப்தியும் தோன்றி வருகின்றன. வலதுசாரி வாக்குவங்கியை தனக்கு சாதகமாக உறுதிபடுத்தவே அவர் இவ்வாறு பேசிவருவதாக கூறப்படுகிறது. அதனால்தான் அவரது இத்தகைய வெறுப்புப் பேச்சுகளுக்கிடையேயும் அவரது அதிபர் வேட்பாளர் தகுதிக்கு எவ்வித தொந்தரவும் ஏற்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
பாரீஸ் தாக்குதல், சான் பெராடினோ தாக்குதல்களுக்குப் பிறகே டிரம்ப்பிற்கு குடியரசுக் கட்சி வாக்குவங்கியில் செல்வாக்கு அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.