தென் ஆப்பிரிக்காவில் மூன்றாம் அலை தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தென் ஆப்பிரிக்க பிரதமர் சிரில் ரமபோசா கூறும்போது, ''அடுத்த 14 நாட்களுக்கு உள் அரங்கம் மற்றும் வெளி அரங்க நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படுகின்றன. நாம் இரண்டு அலைகளைக் கடந்தோம். இப்போது மூன்றாம் அலையை எதிர்கொண்டுள்ளோம். இது பெரிய சவால். தொற்றுநோய்ப் பரவல் பேரிழப்பைத் தரும்'' என்றார்.
தென் ஆப்பிரிக்காவில் டெல்டா வைரஸ் காரணமாக அங்கு தொற்று அதிகரித்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், 15,036 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 122 பேர் பலியாகி உள்ளனர்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் இதுவரை 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். ஆப்பிரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரை தென் ஆப்பிரிக்கா, மொராக்கோ, துனிசியா, எத்தியோபியா, எகிப்து ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவில் இதுவரை 1.7% மக்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசியைக் கொள்முதல் செய்வதில் உலக நாடுகளிடையே பெரும் வேறுபாடு நிலவுகிறது.
உலக அளவில் கரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 18.18 கோடியைக் கடந்துள்ளது. அதேசமயம் கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 16.63 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கரோனா தொற்று ஏற்பட்டு இதுவரை 39.38 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.