பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதனால் தடி யடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு களை வீசியும் போராட்டக்காரர் களை கலைத்தனர்.
பாரீஸில் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்நிலையில், பருவ நிலை மாற்றத்துக்குக் காரணமாக உள்ள முதலாளித்துவ நாடுகளுக்கு எதிரான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.
ஆனால், பாரீஸில் கடந்த மாதம் தீவிரவாத தாக்குதலுக்கு 130-க்கும் மேற்பட்டோர் பலியானதையடுத்து, போராட்டத்துக்கு போலீஸார் கட்டுப் பாடுகளை விதித்திருந்தனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை ஆயிரக்கணக்கான சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மனித சங்கிலி அமைத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது டி லா ரிபப்ளிக் சதுக்கம் பகுதியில், முதலாளித்துவ நாடுகளுக்கு எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை கலைப்பதற்காக போலீஸார் தடியடி நடத்தியதுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.