மெக்காஃபி ஆன்டிவைரஸ் நிறுவனத்தின் நிறுவனரும் மென்பொருள் துறையின் முன்னோடியுமான ஜான் டேவிட் மெக்காஃபி ஸ்பெயின் சிறையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
கணினி பாதுகாப்பு ஆன்டிவைரஸ் தயாரிப்பில் முன்னோடியான மெக்காஃபி நிறுவனத்தின் நிறுவனர் மெக்காஃபி (75). இவர்2014-லிருந்து 2018 வரை அமெரிக்காவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில், இவர் 2020-ம் ஆண்டு அக்டோபரில் ஸ்பெயினின் பார்சிலோனா விமான நிலையத்தில் அந்நாட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.
பார்சிலோனா சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை ஒப்படைக்க வேண்டும் என அமெரிக்க அரசு கோரி வந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த ஸ்பெயின் தேசிய நீதிமன்றம் மெக்காஃபியை அமெரிக்கா அனுப்ப அனுமதி அளித்தது.
இந்தச் சூழலில் கடந்த புதன்கிழமை சிறையில் அவர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இது தற்கொலையாக இருக்கலாம் என்ற வகையில் விசாரணை நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெக்காஃபியின் வழக்கறிஞர்கள் இதுகுறித்து கூறும்போது, "ஜான் மெக்காஃபியை அமெரிக்கா அனுப்புவதற்கான வழக்கில் தரப்பட்ட உத்தரவை எதிர்த்து சட்ட ரீதியில் போராடுவதற்கான ஏற்பாடுகளில் இருந்தோம். ஆனால், அவருடைய திடீர் மரணம் அதிர்ச்சியளிக்கிறது" என்றார்.