உலகம்

துருக்கியின் துர்கோவாக் கரோனா தடுப்பூசி

செய்திப்பிரிவு

தம் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிக்கு ’துர்கோவாக்’ என்று துருக்கி பெயரிட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த நாட்டுத் தயாரிப்பில் கரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் துருக்கி அரசு உள்நாட்டில் கண்டுபிடித்த கரோனா தடுப்பூசிக்கு ’துர்கோவாக்’ என்று பெயரிட்டுள்ளது.

இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “ஜெர்மனி மற்றும் சீனாவின் கரோனா தடுப்பூசிகளுடன், நமது தடுப்பூசியும் விரைவில் பயன்படுத்தப்பட உள்ளது. தற்போது நமது நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிக்கு ’துர்கோவாக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது நமது பரிசோதனை மூன்றாம் கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்காலத்தில் கரோனா பரவலை நமது தடுப்பூசி தடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

துருக்கியில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் ஜூன் மாதம் முதல் அங்கு கரோனா தொற்று குறைந்துள்ளது. துருக்கியில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் தடுப்பு மருந்துகள் பெரும் பங்காற்றி வருகின்றன. மக்கள் மத்தியில் கரோனா தடுப்பு மருந்தைப் பெருவாரியாகக் கொண்டுசென்ற இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது. இதனைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் கரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில் கரோனா தடுப்பூசியைப் பெரும்பாலான அளவில் செலுத்திய இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகள் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளன.

SCROLL FOR NEXT