மாதிரிப் படம். 
உலகம்

”வைரக் கற்கள் இல்லை” - ஏமாற்றம் அடைந்த தென் ஆப்பிரிக்க மக்கள்

செய்திப்பிரிவு

தென் ஆப்பிரிக்காவில் வைரம் என நினைத்துக் கற்களைத் தேடி எடுத்த மக்களுக்குத் தற்போது அவை படிகக் கற்கள் எனத் தெரியவந்துள்ளது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “தென் ஆப்ரிக்காவில் குவாசுலு-நடால் மாகாணத்தில் மலைப் பகுதியில் கடந்த வாரம் வைரம் கிடைக்கிறது என்று பரவிய தகவலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டமாகக் கூடி கற்களைத் தேடி எடுத்தனர். இந்த நிலையில் அவை வைரக் கற்கள் இல்லை என்றும், வெறும் படிகக் கல் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்” என்று செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், குவாசுலு-நடால் மாகாணத்தின் உள்ளூர் அரசு அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “நாங்கள் மக்களிடமிருந்து கற்களைப் பெற்று அதனைத் தொடர் பரிசோதனை செய்தோம். இறுதி சோதனையில் அவை வைரக் கற்கள் இல்லை என்றும் வெறும் படிகக் கற்கள் என்றும் கண்டறியப்பட்டது” என்று தெரிவித்தனர்.

கரோனா காரணமாகத் தென் ஆப்பிரிக்காவில் கடுமையான வறுமை ஏற்பட்டுள்ளது. வேலையின்மை காரணமாக வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கரோனா தீவிரமாகப் பரவும் காலத்தில் மக்கள் இம்மாதிரியாகக் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வறுமை அதிகம் நிலவும் ஆப்பிரிக்க நாடுகளில்தான் வைரங்கள் அதிகம் கண்டெடுக்கப்படுகின்றன.

உலகிலேயே மிகப்பெரிய வைரம் 1905ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது. இதன் எடை 3,106 கேரட் அளவு கொண்டதாகும். உலகின் இரண்டாவது பெரிய வைரம் போட்ஸ்வானாவில் 2016ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 1,109 கேரட் ஆகும்.

உலகின் மூன்றாவது பெரிய வைரமும் போட்ஸ்வானாவில்தான் சில நாட்களுக்கு முன்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT