ஜி7 போன்ற உலகநாடுகள் சிலவற்றை உள்ளடக்கிய சிறு குழுவால், இந்த உலகத்தை ஆட்சி செய்ய முடியாது என சீனா விமர்சித்துள்ளது.
ஜி 7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள காா்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க இந்தியா, ஆஸ்திரேலியா, தென் கொரியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில், சீனா முன்வைத்துள்ள `பெல்ட் அண்ட் ரோட்' திட்டத்துக்கு ஜி-7 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதற்கு பதிலாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்வைத்துள்ள `பில்ட் பேக் பெட்டர் வேர்ல்டு’ (பி3டபிள்யூ) எனும் திட்டத்தை செயல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஏழை மற்றும் மத்திய தர நாடுகள் கட்டமைப்பில் பயன்பெறும் என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த முடிவு தொடர்பாக பிரிட்டனில் உள்ள சீன தூதரகத்தின் செய்தி தொடர்பாளர், "ஒருசில நாடுகள் அடங்கிய சிறு குழுக்கள் முடிவு எடுக்கும் காலம் நீண்ட நாட்களுக்கு முன்னதாகவே முடிந்துவிட்டது. சிறு குழுக்கள் இனியும் உலகை ஆள முடியாது.
சீனாவைப் பொறுத்தவரை அளவில் பெரிய நாடோ அல்லது சிறிய நாடோ, பலவீனமானதோ அல்லது பலமான நாடோ, ஏழையோ அல்லது பணக்கார நாடோ அனைத்தும் சமமே.
சர்வதேச விவகாரங்களில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும். ஐ.நா.,கொள்கையை ஒட்டிய சர்வதேச முடிவுகள் எட்டப்பட வேண்டும். ஜி7 போன்ற குழுக்கள் உலகை ஆள முடியாது" என்று கூறியிருக்கிறார்.