பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கூடியுள்ளனர்.
பருவநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பமயமாதல் தொடர்பான ஐ.நா. சபை சார்பில் நடக்கும் சர்வதேச மாநாடு இன்று தொடங்குகிறது. இந்த விழிப்புணர்வு மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் அங்கு கூடினர்.
இந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு, நாடுகள் இடையிலான உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்காக சர்வதேச நாடுகளின் தலைவர்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கூடியுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை) டெல்லியிலிருந்து புறப்பட்டு பாரீஸ் சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தில், பிரதமர் மோடி சர்வதேச சூரிய எரிசக்தி தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் ஹோலந்தேவை சந்தித்துப் பேச உள்ளார். அதேபோல, அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனும் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் விவாதிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2009-ல் நடந்த பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு தோல்வியில் முடிவடைந்தது. வளர்ந்த நாடுகள் நச்சுப் புகையை குறைப்பது, வளரும் நாடுகளுக்கு நிதியுதவி கொடுப்பது தொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததைக் கண்டித்து, கோபன்ஹேகன் பருவநிலை மாற்ற மாநாட்டில் அப்போதைய இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கும், சீன பிரதமர் வென் ஜியாபோவும் தங்கள் குழுவுடன் வெளிநடப்பு செய்தனர்.
பருவநிலை மாற்றம் விவகாரத்தில் வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கியாட்டோ மாநாட்டு தீர்மானத்தின்படி, நச்சுப் புகையை கட்டுப்படுத்த வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி உதவி செய்ய வேண்டும் என்று வளரும் நாடுகள் அப்போது கோரிக்கை வைத்தன. இதை வளர்ந்த நாடுகள் ஏற்க மறுத்துவிட்டன. 10 நாள் விவாதத்தில் இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் ஒரே நிலையை எடுத்து ஓரணியாக நின்றன. மற்ற நாடுகள் மாறுபட்ட கருத்தை முன்வைத்தன.
சர்வதேச அளவில் நடக்கும் இயற்கைப் பேரழிவுகள் போன்ற பல்வேறு காரணங்களால் இன்று முதல் நடக்க இருக்கும் பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு உச்சகட்ட எதிர்ப்பார்ப்பைப் பெற்றுள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட முயற்சிகளை கொள்கை ரீதியாக முன்னெடுத்துச் செல்ல இதில் பங்கேற்கும் அனைத்து நாடுகளும் ஆயத்தமான நிலைப்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.