நைஜீரியாவில் பெரிய திரைகளில் கால்பந்துப் போட்டியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் குண்டுவெடித்தது. இதில் 21 பேர் உயிரிழந்தனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரேசில்-மெக்ஸிகோ இடையேயான கால்பந்துப் போட்டியைப் பெரிய திரைகளில் பார்ப்பதற்காக நைஜீரியா நயி-நமா பகுதியில் மக்கள் கூடியிருந்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த ரிக்ஷாவில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
இதில், 21 பேர் உயிரிழந்தனர். 27-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். போகோஹாரம் பயங்கரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாக நைஜீரியா குற்றம்சாட்டியுள்ளது. கால்பந்துப் போட்டியை மக்கள் கூட்டம் கூட்டமாகப் பார்க்கும் இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து, பெரிய திரைகளில் கால்பந்துப் போட்டியைக் காணும் இடங்களில் பாதுகாப்பை அதிகரிக்க நைஜீரிய அரசு திட்டமிட்டுள்ளது. நைஜீரியாவின் தேசிய விளையாட்டு கால்பந்து என்பது குறிப்பிடத்தக்கது.