உலகம்

ஜெர்மனியில் ஃபேஸ்புக் அலுவலகம் மீது மர்ம கும்பல் தாக்குதல்; சுவரில் டிஸ்லைக் வாசகம் பதிவு

ராய்ட்டர்ஸ்

ஜெர்மனியில் உள்ள ஃபேஸ்புக் அலுவலகத்தை மர்ம கும்பல் அடித்து நொறுக்கியதோடு அல்லாமல் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்ற வாசகத்தை சுவற்றில் எழுதி சென்றனர்.

ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் ஃபேஸ்புக் அலுவலகம் செயல்படுகிறது. இங்கு நேற்று (ஞாயிறு) இரவு கறுப்பு உடையணிந்த சுமார் 20 நபர்கள் நுழைந்து அலுவலக ஜன்னல்களை சூறையாடியதாக புலனாய்வு போலீஸார் கூறினர்.

அதோடு, ஃபேஸ்புக் பேனர்களை மறைக்கும்படியாக கருப்பு மை ஊற்றியும் சுவற்றில் 'ஃபேஸ்புக் டிஸ்லைக்' என்று எழுதியதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலில் ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அலுவலக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

அமெரிக்காவில் முஸ்லிம் குடியேற்றத்துக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்ற குடியரசு கட்சி அதிபர் வேட்பாளரர் டோனால்டு டிரம்ப்பின் பேச்சைத் தொடர்ந்து மார்க் இவ்வாறு கூறியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

SCROLL FOR NEXT