உலகம்

நைஜீரியாவில் ட்விட்டருக்கு தடை; இந்தியாவின் ‘கூ’ செயலிக்கு அனுமதி

செய்திப்பிரிவு

நைஜீரிய அரசு ட்விட்டர் சமூகவலைதளத்துக்கு தடை விதித்த மறுநாளே இந்தியாவில் வடிவமைக்கப்பட்ட கூ செயலிக்கு அனுமதி வழங்கியுள்ளது.

நைஜீரிய அரசின் இந்த முடிவை கூ செயலி உருவாக்கிய நிறுவனத்தின் தலைமை செயல்அதிகாரி அபரமேயா ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார்.

கடந்த வாரத்தில் கூ செயலிதளம் நைஜீரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்திருந்தது. மேற்குஆப்பிரிக்க நாட்டில் புழக்கத்தில் உள்ள பிற மொழிகளிலும் தகவல்களை பகிர்ந்து கொள்ள வசதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவில் ஹவுசா, இக்போ, யோர்பா உள்ளிட்ட 500 மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் மொழிகளில் பரிவர்த்தனை செய்ய வசதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதன்படி நைஜீரியாவின் உள்ளூர் மொழிகள் கூ செயலியில் விரைவில் இடம்பெறும் என்று அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச அளவில் பயன்படுத்தும் செயலியாக கூ-வை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதற்கேற்ப இதன் தளம் மேம்படுத்தப்படும். தற்போதுபல நாடுகளில் இது புழக்கத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மியான்மர், நமீபியா, நேபாளம், செனகல், ருவாண்டா, பிலிப்பின்ஸ், பெரு, பராகுவே உள்ளிட்ட நாடுகளில் கூ செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிரான கருத்துகள் ட்விட்டரில் இடம்பெற்றதால் மத்திய அரசுக்கும், அந்நிறுவனத்துக்கும் இடையே பெரும் பிரச்சினை உருவானது. இந்த சமயத்தில் இதற்கு மாற்றாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலி அறிமுகமானது. ட்விட்டருக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தும் வகையில் பல சிறப்பம்சங்கள் இதில் உள்ளன. மேலும் பல மொழிகளில் பயன்படுத்தும் வகையிலான வசதிகளும் கூ செயலியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டருக்கு காலவரையற்ற தடையை நைஜீரிய அரசு பிறப்பித்த மறு நாளே கூ செயலிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது இந்திய நிறுவனத்துக்குக் கிடைத்த பெரும் வரவேற்பாகும்.

பியாப்ராவில் 1967-ல் தொடங்கிய உள்நாட்டுக் கலவரத்தில் 30 மாதங்கள் தொடர்ந்து போரிட்டவர்களை உள்நாட்டு மொழியைப்போல பாதுகாப்போம் என அதிபர் முகமது புகாரி ட்விட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தார். இது மோசமான கொள்கை எனக்கூறி ட்விட்டர் அதிபரின் பதிவை 12 மணி நேரத்துக்கு முடக்கியது. அதிபரின் கணக்கை முடக்கியதால் ட்விட்டர் செயல்பாடுகளை நாட்டிலிருந்தே காலவரையின்றி தடை செய்வதாக அந்நாட்டு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லால் முகமது அறிவித்தார்.

SCROLL FOR NEXT