உலகம்

ரஷ்யாவில் அதிகரிக்கும் கரோனா

செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், “ரஷ்யாவில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 10,407 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு மாதங்களை ஒப்பிடும்போது இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.

ரஷ்யாவில் கரோனா தடுப்பூசிகளைக் குறைவாக செலுத்தி வருவதே கரோனா பரவலுக்குக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ரஷ்யா ஆறாவது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் இதுவரை 51 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 12% மக்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் வெளிநாட்டவரும் ரஷ்யாவில் வந்து கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று அதிபர் புதின் அறிவித்தார். மேலும், கரோனா தடுப்பூசிகள் குறித்து அச்சம் கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

ரஷ்யாவின் கமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளன. ஸ்புட்னிக் கரோனாவுக்கு எதிராக 91.6% சிறப்பாகச் செயலாற்றக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-வி தடுப்பூசி 68 நாடுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT