சர்வதேச அளவில் பல முக்கிய இணையதளங்கள் சில மணி நேரம் செயல்படாமல் முடங்கின.
ரெட்டிட், ஸ்பாடிஃபை, ஹெச்பிஓ மேக்ஸ், அமேசான்.காம், ஹூலு, கார்டியன், நியூயார்க் டைம்ஸ், பிபிசி உள்ளிட்ட எண்ணற்ற இணையதளங்கள் திடீரென செயல்படாமல் முடங்கின. இந்த இணையதளங்களுக்குச் சென்ற பயனர்களுக்கு, 503 எரர் செய்தி மட்டுமே திரையில் தோன்றியது.
இதனால் லட்சக்கணக்கான பயனர்கள் இதுகுறித்து சமூக வலைதளங்களில் பதிவிடத் தொடங்கினர். இதற்குக் காரணம் இந்தத் தளங்களுக்கு க்ளவுட் சேவை தரும் ஃபாஸ்ட்லி என்கிற அமெரிக்க நிறுவனம் என்பது தெரியவந்துள்ளது.
ஃபாஸ்ட்லியின் க்ளவுட் சேவையில் ஏதோ பிரச்சினை ஏற்பட்டதால், அதன் வாடிக்கையாளராக இருக்கும் முக்கிய இணையதளங்கள் அனைத்தும் முடங்கின. இதுகுறித்து விசாரித்து வருவதாக ஃபாஸ்ட்லி பதிவிட்டது.
சிறிது நேரத்தில் பிரச்சினை என்ன என்பது அடையாளம் காணப்பட்டுச் சரிசெய்யப்பட்டு வருவதாக ஃபாஸ்ட்லி பதிவிட்டது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிய இணையதளங்கள் மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் சர்வதேச அளவில் ஃபாஸ்ட்லியின் பெயர் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.