பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் வெளிநாடு செல்வதற்கு அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி வழங்கியது.
வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்கள் பட்டியலி லிருந்து தனது பெயரை நீக்க பரிசீலிக்கும்படி முஷாரப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சிந்து உயர்நீதிமன்ற 2 நீதிபதி அமர்வு அதை ஏற்றுக்கொண்டது. வெளிநாட்டுப் பயணத் தடை பட்டியலிலிருந்து முஷாரப் பெயரை நீக்கும்படி அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டது. எனவே முஷாரப் வெளிநாடு செல்ல இனி தடை இல்லை.
தேசத் துரோகம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக முஷாரப் மீது விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்டில் உடல்நலக்குறைவால் வாடிவரும் தனது தாயாரை பார்ப்பதற்காக, வெளிநாடு செல்ல தடை விதிக்கப் பட்டவர்கள் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்கும்படி சிந்து உயர் நீதிமன்றத்தில் முஷாரப் மனு செய்திருந்தார்.
வெளிநாடு செல்ல அவரை அனுமதித்தால் தலைமறைவாகி விடுவார் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை.