கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலா பயணிகள் ஸ்பெயினுக்கு வருகை புரியலாம் என்று அந்நாடு அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஸ்பெயின் சுகாதாரத் துறை அமைச்சம் கரோலினா கூறும்போது, “ கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகள் ஸ்பெயின் நாட்டில் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் அனுமதிக்கப்படுவர்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஸ்பெயினும் ஒன்று. கட்டுப்பாடுகள் மற்றும் கரோனா தடுப்பூசிகளை செலுத்தியதன் காரணமாக ஸ்பெயினில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.
கரோனா தாக்கம் குறைந்துள்ளதால் உலக நாடுகள் தங்களது எல்லைகளை திறந்து வருகின்றனர். அந்த வகையில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கி வருகின்றன.
ஸ்புட்னிக், மாடர்னா, பைஸர், சினோபார்ம், கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய கரோனா தடுப்பூசிகள் கரோனா வைரஸுக்கு எதிராகப் பயன் அளிப்பதாக மருந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
உலகம் முழுவதும் இதுவரை 10%க்கும் அதிகமான மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.