மெகுல் சோக்ஸியின் ஜாமீன் மனுவை டோமினிக்கா நீதிமன்றம் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்து 2018ஆம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரிபியன் தீவுக்கு மெகுல் சோக்ஸி குடும்பத்துடன் தப்பி அங்கு வாழ்ந்து வருகிறார்.
2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஆன்டிகுவா மற்றும் பர்படாஸில் முதலீட்டுத் திட்டம் மூலம் குடியுரிமையை மெகுல் சோக்ஸி பெற்றார்.
கடந்த 23- ம் தேதி ஜாலி ஹார்பருக்குச் சென்ற மெகுல் சோக்ஸியைக் காணவில்லை. இதையடுத்து ஆன்டிகுவா பர்படாஸ் போலீஸார் இன்டர்போல் போலீஸார் மூலம் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்தனர்.
ஆன்டிகுவா பர்படாஸ் தீவிலிருந்து தப்பித்த மெகுல் சோக்ஸி, டோமினிக்கா நாட்டின் வடபகுதியான தலைநகர் ரோஸியில் உள்ள கேன்பீல்ட் கடற்கரையில் அந்நாட்டு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
தற்போது டோமினிக்கா நாட்டு போலீஸாரின் பாதுகாப்பில் இருக்கும் மெகுல் சோக்ஸியை ஏற்கமாட்டோம் என ஆன்டிகுவா பர்படாஸ் பிரதமர் பிரவுன் அறிவித்துள்ளார். அதேசமயம் மெகுல் சோக்ஸியை நேரடியாக இந்தியாவிடம் ஒப்படைத்துவிடுங்கள் என்று டோமினிக்கா நாட்டுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மெகுல் சோக்ஸியின் இந்திய வழக்கறிஞர் விஜய் அகர்வால் மூலம் டோமினிக்கா வழக்கறிஞர் வேன் மார்ஷ், மெகுல் சோக்ஸி குறித்து ஆட்கொணர்வு மனுவை டோமினிக்கா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இதையடுத்து, டோமினிக்காவிலிருந்து மெகுல் சோக்ஸியை நாடு கடத்தும் நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த மனு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மெகுல் சோக்ஸி சட்டவிரோதமாக டோமினிக்காவில் நுழைந்துள்ளதாகவும், இந்தியாவில் 14000 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கில் தேடப்படும் நபர் என்பதால் அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட வேண்டும் என டோமினிக்கா அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால் இந்திய அரசியலமைப்பின்படி, மெகுல் சோக்ஸி இந்திய குடிமகன் அல்ல என்று அவரது வழக்கறிஞர்கள் வாதிட்டனர். வெளிநாட்டு குடியுரிமையைப் பெறும் எந்தவொரு நபரும் இந்திய குடிமகன் அந்தஸ்தை தானாகவே இழப்பார் என்று கூறினர். எனவே, அவரை நேரடியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப முடியாது என்றும் குறிப்பிட்டனர்.
இதனிடையே டோமினிக்காவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மெகுல் சோக்ஸி சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட உள்ளதாக சோக்ஸியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் தெரிவித்துள்ளார்.