சவுதியுடன் நல்ல முறையில் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஈரான் - சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இரு நாட்டு உறவு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவைக் கொண்டிருப்பதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஈரானும் சவுதியுடனான பேச்சு வார்த்தை உறுதிப்படுத்தியது.
இந்த நிலையில் சவுதியுடனான பேச்சு வார்த்தை எவ்வாறு சென்றுக் கொண்டிருக்கிறது என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈரான் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் சயீத்திடம் கேட்கப்பட்டது.
இதுகுறித்து சயீத் பதில் கூறும்போது, “ சவுதியுடனான பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கிடையே புரிதலை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்” என்றார்.
ஈரான் - சவுதி மோதல்
சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸில் அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குராயிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்தத் தாக்குதலுக்கு ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் - சவுதி இடையே பதற்றம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.