உலகம்

ஒரு வீரருக்காக 5 தீவிரவாதிகளை விடுவித்தது ஏன்? - அமெரிக்க எம்.பிக்களுக்கு அதிகாரிகள் விளக்கம்

செய்திப்பிரிவு

தலிபான் தீவிரவாத அமைப்பினர் கைது செய்து வைத்திருந்த அமெரிக்க வீரர் பாவே பெர்க்தாலின் உடல்நிலை மிகவும் மோசமானதால்தான், அவரை விடுவிக்க 5 தலிபான் தீவிரவாதிகளை விடுதலை செய்யும் யோசனைக்கு ஒப்புக்கொண்டோம் என்று அதிபர் ஒபாமா அரசின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அமெரிக்க எம்.பி.க்களை சந்தித்து அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க வீரர் பாவே பெர்க்தாலை கைது செய்து தலிபான் தீவிரவாத அமைப்பினர் கடந்த 5 ஆண்டுகளாக சிறை வைத்திருந்தனர். அவரை மீட்பது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமெரிக்கா வசம் உள்ள 5 தலிபான் தீவிரவாதிகளை விடுவிக்க ஒப்புக்

கொண்டால், பாவே பெர்க்தாலை விடுவிக்க தயார் என்று தலிபான்கள் தெரிவித்தனர். இதற்கு ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அமெரிக்க வீரரை தலிபான்கள் விடுவித்தனர். அதே போன்று, 5 தீவிரவாதிகளையும் அமெரிக்கா விடுதலை செய்துள்ளது.

இந்நிலையில், 5 தீவிரவாதிகளை விடுவிக்கும் தலிபான்களின் கோரிக்கையை ஏற்றது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஒபாமா தலைமையிலான அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதைத் தொடர்ந்து, பெர்க்தாலுக்காக 5 தலிபான் தீவிரவாதிகளை விடுவிக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக அமெரிக்க எம்.பிக்களுக்கு உயர் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். அப்போது, “கடந்த ஜனவரி மாதம் தலிபான்களிடமிருந்து வந்த சி.டியில், அமெரிக்க வீரர் பாவேல் பெர்க்தால் மிகவும் சோர்வுடனும், உடல் நலிவுற்ற நிலையிலும் காணப்பட்டார். அவருடைய உயிருக்கு ஆபத்து என்பதை அறிந்ததால், நம்மிடம் சிறைக் கைதிகளாக இருந்த 5 தலிபான் வீரர்களை விடுவிக்க ஒப்புக்கொண்டோம். இதையடுத்து பெர்க்தாலை தலிபான்கள் விடுவித்துள்ளனர்” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடல் நிலையில் முன்னேற்றம்

இந்நிலையில், தலிபான்களிடமிருந்து மீட்கப்பட்ட அமெரிக்க வீரர் பாவே பெர்க்தால், ஜெர்மனில் உள்ள தி லேண்ட்ஸ்டல் மண்டல மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள், பெர்க்தாலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தலிபான்கள் விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக தலிபான் தீவிரவாத அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜய்புல்லா முஜாகித் கூறும்போது, “அமெரிக்க வீரர் பாவே பெர்க்தாலை சிறை வைத்திருந்தபோது, அவரை நன்றாகத்தான் கவனித்துக் கொண்டோம். பழங்கள் உள்ளிட்ட உணவு வகைகளை வழங்கினோம்.

எங்கள் அமைப்பைச் சேர்ந்தோருடன் அவர் கால்பந்து விளையாடி உள்ளார். அந்த அளவுக்கு அவரின் உடல்நிலை சீராக இருந்தது. எங்களிடமிருந்தபோது கொடுமைப்படுத்தினோமா என்பதை, அவர் அமெரிக்கா வந்ததும் கேளுங்கள். எங்கள் மீது புகார் எதுவும் தெரிவிக்க மாட்டார்” என்றார்.

SCROLL FOR NEXT