நைஜீரியாவின் வடமத்திய பகுதியில் துப்பாக்கிய ஏந்திய நபர்கள் பள்ளி மாணவர்களைக் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து நைஜீரிய போலீஸார் தரப்பில், “ஞாயிறன்று வடமத்திய பகுதியில் அமைந்துள்ள சலிஹு தன்கோ என்ற இஸ்லாமியப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் வருகை புரிந்திருந்தனர். அப்போது கையில் துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்த மாணவர்களைக் கடத்திச் சென்றனர். எத்தனை மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டார்கள் என்ற எண்ணிக்கை இதுவரை கண்டறியப்படவில்லை. கடத்தல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை செய்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பிப்ரவரி மாதம் நைஜீரியாவில் சம்ஃபாரா மாகாணத்தில் உள்ள பெண்கள் மேல்நிலை பள்ளியை சேர்ந்த 100 மாணவிகளை துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் கடத்தி சென்றனர். பின்னர் அரசுடனான பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு தீவிரவாதிகள் மாணவிகளை விடுவித்தனர்.
நைஜீரியா நாட்டில் கடந்த சில வருடங்களாகவே தீவிரவாதத் தாக்குதல் அதிகரித்து வருகிறது.
நைஜீரியாவை மையமாகக் கொண்டு செயல்படும் போகோ ஹராம் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் மற்றும் கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போகோ ஹராம் தீவிரவாத அமைப்பு அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது.
போகோ ஹராம்
2002-ல் சாதாரணமாகத் தொடங்கப்பட்ட போகோ ஹராம் இயக்கம், வடகிழக்கு நைஜீரியாவில் கடந்த பத்தாண்டுகளாகத் தீவிரவாதச் செயலில் ஈடுபடத் தொடங்கியது.
போகோ ஹராம் தீவிரவாதிகள் இதுவரை சுமார் 27,000 பேரைக் கொன்றுள்ளனர்.