ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் இருந்து பழங்குடி பெண்களை காப்பாற் றுங்கள் என்று ஐ.நா. சபையில் அந்த இனத்தைச் சேர்ந்த இளம் பெண் கண்ணீர்மல்க வேண்டுகோள் விடுத்தார்.
இராக்கில் ஷியா, சன்னி முஸ்லிம்கள் மற்றும் குர்து, யாஸிதி பழங்குடி இன மக்கள் வசிக்கின்ற னர். அங்கு ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். மறைந்த அதிபர் சதாம் உசேன் சன்னி பிரிவைச் சேர்ந்தவர். அவரது வீழ்ச்சிக்குப் பிறகு ஷியா பிரிவு அரசியல் தலைவர்கள் இராக்கை ஆட்சி செய்து வருகின்றனர்.
தற்போதைய பிரதமர் ஹைதர் அல்-பாக்தாதி ஷியா பிரிவைச் சேர்ந்தவர். அவரது ஆட்சிக்கு எதிராக சன்னி பிரிவைச் சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இராக்கின் பெரும் பகுதி தற்போது ஐ.எஸ். கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு குர்து இன மக்களும் கணிசமாக வாழ்கின்றனர். தங்களுக் கென்று தனிப்படை வைத்துள்ள குர்து இன மக்கள் அமெரிக்க உதவி யுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
ஆனால் சிறுபான்மையினரான யாஸிதி பழங்குடி இன மக்களுக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை. இராக்கின் வடமேற்குப் பகுதியில் அவர்கள் அதிகமாக வசிக்கின்றனர். அந்தப் பிராந்தியத்தில் பெரும் பகுதியை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
ஆண்களை சிரச்சேதம் செய்யும் ஐ.எஸ். படை வீரர்கள், பெண்களை பாலியல் அடிமைகளாக சித்திரவதை செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிய நாடியா முராத் பாஸி (21) என்பவர் தற்போது ஜெர்மனியில் வசித்து வருகிறார். அவர் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நேற்று முன்தினம் வாக்குமூலம் அளித்தார். அவர் பேசியதாவது:
கடந்த ஆகஸ்டில் இராக்கில் உள்ள எங்கள் கிராமத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றினர். என்னு டைய சகோதரர்களை கொலை செய்தனர். நான் உட்பட ஏராளமான பெண்களை சிறைபிடித்து ஒரு பஸ்ஸில் மோசூல் நகருக்கு அழைத் துச் சென்றனர். அங்கு ஆயிரக்கணக் கான யாஸிதி பெண்களும் சிறுமி களும் விலைக்கு விற்கப்பட்டனர். சிலர் பரிசாக வழங்கப்பட்டனர்.
என்னை வாங்கிய நபர், நாள் தோறும் பாலியல் அடிமையாக பயன்படுத்தினார். ஒருநாள் இரவில் பல தீவிரவாதிகள் சேர்ந்து என்னை கூட்டாக பலாத்காரம் செய்தனர். நான் மயங்கும் வரை அந்த கொடுமை நடைபெற்றது.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அவர்களிடம் இருந்து தப்பி தற்போது ஜெர்மனியில் வசிக்கிறேன். பெண்களை சீரழிக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளை வேரறுக்க வேண்டும். அவர்களிடம் இருந்து யாஸிதி பெண்களை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா உள்ளிட்ட 5 நிரந்தர உறுப்பு நாடுகளும் 10 நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளும் உள்ளன. நாடியா முராத் பாஸியின் சொந்த வாழ்க்கையை கேட்ட 15 நாடுகளின் தூதர்களும் கண் கலங்கினர்.