பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நேட்டோ படைகளின் எண்ணெய் லாரிகள் மீது தாலிபான்கள் தாக்குதல் நடத்தினர்.
அதேவேளையில், ஆப்கான் பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர் தாக்குதலில் தாலிபான்கள் கொல்லப்பட்டனர்.
ஆப்கானின் கிழக்கு மாகாணமான நங்கர்ஹரில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லைப் பகுதியில், நோட்டோப் படையினரின் வாகன நிறுத்ததை குறி வைத்து இந்த தாக்குதலை தாலிபான்கள் நடத்தினர். இதனை எதிர்த்து ஆப்கான் பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளை முறியடித்தனர்.
இது குறித்து அந்த மாகாண ஆளுநர் அகமது ஸியா அப்துல்ஸாய், " நோட்டோவின் எண்ணெய் சேமிப்ப லாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், 37 லாரிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. ஆப்கான் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தியதில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் ஒரு தீவிரவாதி தன்னை தானே மாய்த்துக் கொண்டார்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலுக்கு ஆப்கான் தாலிபான் இயக்கம் தான் காரணம் என்று அந்த குழுவின் செய்தித் தொடர்பாளர் சபீயுல்லா முஜாஹித் தெரிவித்தார்.